Sunday, May 19, 2024
Home » புகலிடக் கொள்கையில் முரண்பாடு: நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

புகலிடக் கொள்கையில் முரண்பாடு: நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

by admin
July 10, 2023 11:47 am 0 comment

புகலிடக் கொள்கை தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டினால் நெதர்லாந்து அரசு கவிழ்ந்துள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மர்க் ருட்டே தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நான்கு கட்சிகளிடையிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மன்னர் வில்லம் அலெக்சாண்டரை ஹேகில் கடந்த சனிக்கிழமை (08) சந்தித்த பிரதமர், புதிய தேர்தல் வரையான காலத்திற்கு காபந்து அரசுக்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டுள்ளார் எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியேற்ற குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை கட்டுப்படுத்தும் பிரதமரின் பரிந்துரைக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டதே பிளவுக்கு காரணமாகியுள்ளது.

நெதர்லாந்து அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நிலையில் குடியேற்றம் தொடர்பில் சில காலமாக அரசுக்குள் முறுகல் இருந்து வந்தது.

நெதர்லாந்தில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு மூன்றில் ஒரு மடங்கு அதிகரித்து 47,000ஐ தாண்டி இருந்ததோடு இந்த ஆண்டில் சுமார் 70,000 விண்ணப்பங்கள் கிடைக்கு என்று எதிர்பார்ப்பதாக அரசின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் போர் அகதிகளின் உறவினர்கள் நெதர்லாந்துக்கு வருவதை மாதத்திற்கு 200 பேர் என கட்டுப்படுத்துவது உட்பட புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் பிரதமர் ருட்டே ஈடுபட்டிருந்தார்.

எனினும் அவரது கூட்டணி கட்சிகளான கிறிஸ்டியன் ஒன்றியம், குடும்ப ஆதரவு கட்சி மற்றும் சமூக விடுதலை டி66 கட்சிகள் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள.

நெதர்லாந்தில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகிப்பவர் என்ற சாதனைக்கு உரியவரான 56 வயது ருட்டே 2010 தொடக்கம் அந்தப் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது தவணைக்கு பதவி வகிக்க தனக்கு சக்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டபோதும் தனது கட்சியுடன் ஆலோசனை பெற்ற பின்னரே இறுதி முடிவை அறிவிக்கவுள்ளார்.

நாட்டில் தீவிர வலதுசாரி கட்சிகளின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதற்கான அழுத்தத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT