ஒரு கட்சி, இரண்டு சுயேச்சை குழுக்கள் நேற்று கட்டுப்பணம் | தினகரன்


ஒரு கட்சி, இரண்டு சுயேச்சை குழுக்கள் நேற்று கட்டுப்பணம்

அரசியல் கட்சி வேட்பாளர் ரூ. 50 ஆயிரம்; சுயேச்சை வேட்பாளர் ரூ. 75 ஆயிரம் கட்டுப்பணம்

13 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள்; 15,992,096 பேர் வாக்களிக்கத் தகுதி

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென நேற்று மாலைவரை இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் ஓர் அரசியல் கட்சியுமாக மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.

இலங்கை சோசலிஷக் கட்சியின் வேட்பாளரும் மேலும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

சுமார் 20 வேட்பாளர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஏற்கனவே, வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ, மக்கள் விடுதலை முன்னணியோ இன்னமும் கட்டுப் பணம்  செலுத்தவில்லை என்றார்.

சுயேச்சை வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் 50ஆயிரம் ரூபாவும் கட்டுப் பணமாகச் செலுத்த வேண்டும்.

கட்டுப்பணம் செலுத்துவதற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி நண்பகல் பன்னிரண்டு மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒக்டோபர் 07ஆம் திகதி காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ள போதிலும் அநேகமான கட்சிகள் செயற்பாட்டு அரசியலில் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தனிநபர் ஒருவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதாகவிருந்தால், அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அல்லது இருந்திருக்க வேண்டும்.

எவ்வாறெனினும், இம்முறை ஜனாதிபதி தேர்தல் ஒரு பன்முனைப் போட்டியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிக் கூட்டணிகள் பலமாக உருவாகுமாயின் சிலவேளை இச் சூழல் தவிர்க்கப்படக்கூடும் என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தல் 2018ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலுக்கேற்பவே நடத்தப்படும்.

அதன்படி, ஒரு கோடியே 59 இலட்சத்து 92ஆயிரத்து 96 பேர் (15,992,096) வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.​

13ஆயிரத்திற்குக் குறையாத வாக்களிப்பு நிலையங்களை அமைக்க வேண்டியுள்ளதாகவும், அதுபற்றி மாவட்ட மட்டத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.

வாக்காளர்கள் அட்டைகளை அச்சிடுவதற்கான பணிகளை முன்னெடுக்கவும் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வேட்பு மனுக்கள் தாக்கல்செய்து நிறைவுசெய்யப்பட்டதும் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்தது.

எம்.ஏ.எம்.நிலாம்


Add new comment

Or log in with...