Monday, June 17, 2024
Home » யானை – மனிதன் மோதலை தவிர்க்க மற்றொரு திட்டம்

யானை – மனிதன் மோதலை தவிர்க்க மற்றொரு திட்டம்

by sachintha
May 23, 2024 6:00 am 0 comment

இலங்கையின் விவசாயப் பிரசேதங்களில் வாழும் மக்கள் அண்மைக் காலமாக முகம்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக யானை_- மனிதன் மோதல் விளங்குகின்றது. இப்பிரச்சினையினால் அவ்வாறான பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்வும் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருநாகல், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்கள் இப்பிரச்சினையைப் பெரிதும் எதிர்கொண்டுள்ளன.

வரட்சிக் காலங்களில் காடுகளிலுள்ள நீர்த்தடாகங்கள் வற்றிப் போவதாலும், யானைகள் உணவாகக் கொள்ளக்கூடிய பயிர்கள் அழிவடைவதாலும், அவை விரும்பி உணவாகக் கொள்ளக்கூடிய பயிர்கள் காடுகளுக்கு அருகில் செய்கை பண்ணப்படுவதாலும்தான் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு வருகின்றன.

அதேநேரம் யானைகளின் பெரும்பாலான வாழிடங்கள் மக்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. அவ்வாறான இடங்களில் மக்கள் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யானைகள் காணப்படும் காடுகளுக்கு அருகிலுள்ள பிரதேசங்களில் நெற்செய்கை உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது யானைகள் விரும்பி உணவாகக் கொள்ளக்கூடிய நெல், வாழை மற்றும் தென்னை போன்ற பயிர்கள் யானைகள் காணப்படும் காடுகளுக்கு அண்மித்த பிரதேசங்களில் பயிரிடப்படுவதால் அப்பயிர்களின் வாசனையை அறிந்து அவை அவற்றை நாடி வந்து உணவாகக் கொள்ளவும் செய்கின்றன.

இவை இவ்வாறிருக்க, யானைகள் காணப்படக்கூடிய பிரதேசங்களுக்கு அருகிலுள்ள வீடுகளிலும் கட்டடங்களிலும் நெல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தால் அவ்வீடுகளையும் கட்டடங்களையும் நாடி வந்தும் யானை நெல்லை உணவாகக் கொள்ளும் நிலைமை அடிக்கடி பதிவாகக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு விவசாய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அடிக்கடி முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலைமை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.

அதேநேரம் அண்மைக் காலமாகத்தான் இந்நாட்டில் யானை_- மனிதன் மோதல் அதிகரித்து இருக்கிறது. இதற்கு யானைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணம் என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் யானைகளின் வாழிடங்கள் சுருங்கி வருவதோடு அவை காணப்படும் காடுகளிலுள்ள குளங்களும் நீர்த்தடாகங்களும் நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாது அவை தூர்ந்து போயுள்ளன. அத்தோடு யானைகள் விரும்பி உண்ணக்கூடிய உணவுத் தாவரங்களும் காடுகளில் குறைவடைந்து வருகின்றன.

இவ்வாறான காரணங்களினால் பெரும்பாலான யானைகள் தமக்குத் தேவையான நீரையும் உணவையும் பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. அதனால் காடுகளை விட்டு யானைகள் வெளியே வருகின்றன. அது யானை_- மனிதன் மோதலுக்கு வழிவகுக்கக் கூடியனவாக அமைந்து விடுகின்றது. இதன் விளைவாக இந்நாட்டில் வருடமொன்றுக்கு 300 தொடக்கம்- 400 இற்கு இடைப்பட்ட யானைகள் கொல்லப்படுவதோடு, 60-80 மனிதர்களும் உயிரிழக்கின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் யானை_ மனிதன் மோதல் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளளது. அந்த அடிப்படையில் யானை_ -மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்கவென தற்காலிக விவசாய மின்வேலி மற்றும் கிராம மின்வேலி என்ற இரண்டு முன்னோடித் திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களைப் பாதுகாக்கவென அமைக்கப்படும் மின்வேலிகளை அறுவடைக்குப் பின்னர் அகற்ற வேண்டும். அந்த மின்வேலியின் பராமரிப்பு மற்றும் பொறுப்பை கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் யானை_- மனித மோதல்கள் அதிகம் உள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் கிராமத்தைச் சுற்றி அமைக்கப்படவுள்ள மின்வேலிக்கான பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை அந்தந்தப் பிரதேச செயலகங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக யானை_- மனிதன் மோதல் குறைவடையவும் பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் விருப்பும் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT