Monday, June 17, 2024
Home » ஈரான் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி

ஈரான் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி

- "ஈரான் மக்கள் பலம் வாய்ந்த தலைவர் ஒருவரை இழந்தனர்; இலங்கையும் அதன் நல்ல நண்பனை இழந்தது"

by Rizwan Segu Mohideen
May 22, 2024 1:19 pm 0 comment

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது.

ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பை பதிவிட்டார்.

“ஈரான் மக்கள் பலம் வாய்ந்த தலைவர் ஒருவரை இழந்தனர். இலங்கையும் அதன் நல்ல நண்பனை இழந்தது” என அவரது பதிவு அமைந்திருந்தது.

அதன் பின்னர், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு ஈரான் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனதும், இலங்கை அரசாங்கத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்களை ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை இந்தோனேஷியாவில் இடம்பெற்ற 10ஆவது உலக நீர் மாநாட்டுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (21) நாடு திரும்பியிருந்த நிலையில் இன்றையதினம் (22) ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் குறித்த ஹெலிகொப்டரில் பயணித்த அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் அவ்விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் இலங்கையில் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

ஈரான் ஜனாதிபதியின் நல்லடக்க நிகழ்வில் பங்கேற்கிறார் அலி சப்ரி

ஈரான் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT