மலேசியாவில் இராணுவ ஒத்திகை ஒன்றின்போது இரு கடற்படை ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில் பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு ஹெலியின் விசிறிப் பகுதி மற்றதில் பட்டதை அடுத்து இரண்டும் மோதி, தரையில் விழுந்து நொறுங்கும் காட்சி உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கடற்படைத் தளம் ஒன்று இருக்கும் லுமுட் நகரில் நேற்று (23) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு ஹெலிெகாப்டர் அரங்கத்தின் படிக்கட்டுகள் அருகே விழுந்ததோடு மற்றொன்று அரங்கத்தின் நீச்சல் குளத்தில் விழுந்தது. இரு ஹெலிகளிலும் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை.
‘தளத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு உடல் பாகங்கள் அடையாளம் காண்பதற்காக இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன’ என்று மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.
மே மாதம் நடைபெறவிருக்கும் 90ஆவது கடற்படை தினத்தை முன்னிட்டு அந்த 2 ஹெலிகொப்டர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. விபத்து பற்றிப் புலனாய்வு நடத்த விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.