உக்ரைனுக்கு எதிரான போருக்கு தீர்வு காண்பது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சமயம் உக்ரைன் மீதான போருக்கு உரையாடல் மற்றும் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பது தொடர்பிலான இந்திய நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் இந்த உரையாடலின் போது இணக்கம் கண்டுள்ளனர்.
அதேநேரம் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்த பல்வேறு விடயங்கள் குறித்தும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாறல்களையும் மேற்கொண்டுள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள தொலைபேசி உரையாடலின் விபரங்களை வெளியிட்டுள்ள கிரெம்ளின் மாளிகை, உக்ரைனுடனான போருக்கு தீர்வு காணவென அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க உக்ரைன் மறுப்பதாக ஜனாதிபதி புட்டின் இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இரு தரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளது.