மத்திய காசாவில் தபாதிபி குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை நோன்பு பிடிப்பதற்காக ஒன்றிணைந்து அதிகாலை உணவு தயாரிக்கும் நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அந்தக் குடும்பத்தின் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நுஸைரத் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் இராணுவத்திடம் கேட்டபோது நுஸைரத்தில் பயங்கரவாதிகளின் இரு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் பதிலளித்துள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மருத்துமனையில் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததோடு அதற்கு அருகில் 19 வயதான முஹமது அல் தபாதிபி நின்றிருந்தார்.
“இது எனது தாய், இது எனது தந்தை, இது எனது சித்தி மற்றும் இவர்கள் எனது சகோதரர்கள்” என்று தாக்குதலால் இடது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை காண்பித்தபடி அந்த இளைஞர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“நாம் உள்ளே இருக்கும்போது அவர்கள் வீட்டின் மீது குண்டு போட்டார்கள். எனது தாய் மற்றும் சித்தி சஹர் உணவை தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் உயிர் தியாகம் செய்துவிட்டார்கள்” என்று உடல்கள் வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு மையவாடிக்கு கொண்டு செல்லப்படும் முன்னர் அவர் கூறினார்.
இதில் தாக்குதலில் கொல்லப்பட்ட சிலரது உடல் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தபாதிபி கூறினார்.