கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் ‘ஒன்றிணைவோம் – பலம்பெறுவோம்’ எனும் தொனிப்பொருளில் கடந்த 17ம் திகதி கல்லூரியின் பவள விழா வெகு கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள், தெல்தோட்டை பகுதி மூத்த உலமாக்கள் மற்றும் மூத்த பழைய மாணவர்கள் இந்த நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டனர். கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது.
கல்லூரியின் அதிபர் எம்.ஜி. நயிமுல்லாஹ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸீ. பஹார்தீன் கலந்து சிறப்பித்தார். நிகழ்வின் கௌரவ அதிதிகளாக கொழும்பு, இப்ராஹிம் குழும நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் அர்ஷாத் பாரூக் மற்றும் கண்டி பாரூக் பிரதர்ஸ் உரிமையாளர், சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஜே.எம். பாரூக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் மிக முக்கியமான அம்சமாக நவீனமயப்படுத்தப்பட உள்ள அலுவலக கட்டிடத்துக்கான பெயர்ப்பலகை தொழிலதிபர் எம்.ஸீ. பஹார்தீன் அவர்களினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாணவர் விடுதிக்கான பெயர்ப்பலகை கொழும்பு இப்றாஹீம் என்டர் பிரைஸஸ் பிரைவெட் லிமிடெட் நிருவாகப் பணிப்பாளர் அல்ஹாஜ் அர்ஷாத் பாரூக்கினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.