அவுஸ்திரேலியாவின் பெண்களுக்கான பிக் பாஷ் தொடரில் ஆடும் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து அந்தத் தொடரின் நாயகியாக தெரிவாகியுள்ளார்.
சிட்னி தண்டர் அணிக்காக ஆடும் சகலதுறை வீராங்கனையான அத்தபத்து, 42.58 ஓட்ட சராசரியுடன் மொத்தம் 511 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அத்தபத்துவின் ஓட்ட வேகம் மொத்தம் 17 சிக்ஸர்கள் மற்றும் 69 பெளண்டரிகளுடன் 129.69 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான அத்தபத்து இந்த ஆண்டில் இலங்கை அணிக்காக சோபித்து வந்த நிலையில் மாற்று வீராங்கனையாகவே அவர் சிட்னி தண்டர் அணிக்கு ஆடுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சமரி அத்தபத்து பெண்களுக்கான பிக் பாஷ் தொடரில் முதல் முறை கடந்த 2017 ஆம் ஆண்டு பங்கேற்றதோடு அந்தத் தொடரில் அவர் மெல்போர்ன் ரகனேட்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் போர்த் ஸ்கொச்சர் அணியில் இடம்பெற்றார். எனினும் இந்தப் பருவத்திற்கு முன்னதாக அவர் பிக் பாஷ் தொடரில் ஆடிய மொத்தம் 34 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைச்சதங்களுடன் 18 ஓட்ட சராசரியையே பெற்றிருந்ததோடு அவரது ஓட்ட வேகமும் 95 ஆக இருந்தது.
எனினும் அவர் அண்மைக் காலத்தில் இலங்கை மகளிர் அணி சர்வதேச போட்டிகளில் பல முக்கிய வெற்றிகளை பெற உதவியுள்ளார். கடந்த ஜூலையில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மகளிர் அணி முதல் முறை ஒருநாள் தொடரை வென்றபோது அணியை வழிநடத்திய அத்தபத்து அந்தத் தொடரில் ஆட்டமிழக்காது இரு சதங்களை பெற்றிருந்தார்.
தொடர்ந்து கடந்த செப்டெம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறை இலங்கை மகளிர் அணி டி20 தொடரை வென்று அதிர்ச்சி கொடுத்தபோது அந்தத் தொடரில் இலங்கை சார்பில் அதிக ஓட்டங்கள் பெற்றவராகவும் பதிவானார்.