உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா புறப்பட்டுச் செல்வதற்கு திட்டமிட்டு 48 மணி நேரத்திற்கு குறைவான காலத்திலேயே அந்த அணிக்கான விசாவை இந்திய அரசு உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி இன்று (27) டுபாய் வழியாக ஹைதராபாத்தை அடைய திட்டமிட்ட நிலையில் இந்தியா விசாவை உறுதி செய்யாதது குறித்து அதிருப்தி வெளியிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலுக்கு கடிதம் அனுப்பியது.
இதனை அடுத்து நேற்று முன்தினமே (25) பாகிஸ்தான் வீரர்களின் விசாவை அங்கீகரித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தாமதத்தால் பாகிஸ்தான் அணி ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு முன்னரான திட்டங்களை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஓகஸ்ட் இறுதியில் இந்திய விசாவிற்காக விண்ணப்பித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்தது. ஆசிய கிண்ண போட்டிக்காக இலங்கைக்கு பாகிஸ்தான் அணி பயணித்தது. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்களின் கடவுச்சீட்டுகளை சமர்ப்பிக்க தாமதம் ஏற்பட்டபோதும் செப்டெம்பர் 19இல் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய உடனேயே பாகிஸ்தான் அணி கடவுச்சீட்டுகளை சமர்ப்பித்திருந்தது.