எம்பிலிபிட்டிய பகுதியில் மகாவலி காணிகளில் அறுவடைக்குப் பின்னரான காலப் பகுதியில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளுக்கு இடமளிப்பது குறித்து தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானம் எடுப்பது தொடர்பில் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.
அம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் அறுவடை முடிந்த பின்னர் மகாவலி காணிகளில் அனுமதி வழங்கப்பட்ட விவசாய நிலங்களில் மாணிக்கக் கல் அகழ்வுக்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மகாவலி அதிகாரசபை இதற்குத் தற்பொழுது அனுமதி வழங்குவதில்லையென்றும் பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குழுவில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இரத்தினக்கல் அகழ்வின் மூலம் கிடைக்கும் இலாபத்தின் பங்கு அகழ்வுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் சென்றடைவதில்லையென்ற விடயம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தொழிலாளர்களுக்கு உரிய பங்கு சென்றடைவதை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொவிட்19 சூழல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொண்டுள்ள கடன் பிரச்சினை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் ஸ்மைல் கடன்திட்டம் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
அத்துடன், 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழான வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக, விஜித பேருகொட, பியல் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சரித ஹேரத், ஜகத் குமார சுமித்திராரச்சி, உதயகாந்த குணதிலக, குலசிங்கம் திலீபன், சுமித் உடுகும்புர, குணதிலக ராஜபக்ஷ, குமாரசிறி ரத்னாயக ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.