“நிபா” வைரஸ் இதுவரை இலங்கைக்கு அச்சுறுத்தலாக இல்லையென்றும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்புடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நாயகம் மற்றும் வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் மேற்படி வைரஸ் நாட்டுக்குள் பிரவேசிக்காமல் தடுப்பதற்கான செயற்றிட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அமைச்சர் தெரிவத்துள்ளார்.
எந்த வகையிலும் நாட்டிற்குள் மேற்படி வைரஸ் தொற்று நோயாளியொருவர் இனங்காணப்படுவாரானால் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், விமான பயணிகள் மூலம் மேற்படி வைரஸ் நாட்டுக்குள் ஊடுருவலாம்.
அவ்வாறு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்கலாம் என்ற எச்சரிக்கை நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பில் சுகாதார துறை விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோன்று யாத்திரிகர்களாக வெ ளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் மூலம் அந்த வைரஸ், நாட்டுக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)