மூட்டுவலி(Arthritis) மற்றும் பிற மூட்டுவலி தொடர்பான நோய்கள்’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட உலக இயன் மருத்துவ தினத்துடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழக இயன் மருத்துவ மாணவர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த ‘கொழும்பு இயன் மருத்துவ வாரம் – 2023’ நிகழ்ச்சித் தொடர் கடந்த 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஒருவாரம் நடைபெற்றது.
‘மூட்டுவலி மற்றும் பிற மூட்டு நோய்களுக்கான சிகிச்சைக்கான இயன் மருத்துவ கிளினிக்’
மற்றும் ‘முதுமையுடன் தொடர்புடைய நோய்களுக்கான சிகிச்சைக்கான கிளினிக்’ ஆகிய மேற்படி இரண்டு கிளினிக்குகளும் கடந்த 8 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் UCFM கோபுரத்தின் 11ஆவது மாடியில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இயன் மருத்துவ வல்லுநர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலவசமாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட பலர் இதனால் பயன் பெற்றனர்.
அங்கு, மூட்டுவலி மற்றும் அதனுடன் வரும் நோய்களை பரிசோதித்து அவர்களுக்கு உடல் சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய்நிலைகளைத் தடுக்கும் முறைகள், முதுமையால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளித்தல் பற்றி ஆலோசனை கூறப்பட்டது. நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் இயன் மருத்துவரின் பங்களிப்பை ஊக்குவிப்பதாகவும் இருந்தது. இதற்கு பெருமளவிலான மக்கள் பங்களிப்பை வழங்கியதுடன், கொழும்பு இயன் மருத்துவ வாரம்_ 2023 பெரும் வெற்றியுடன் நிறைவடைந்தது.