அம்பாறை மாவட்டத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதின கொடி விற்பனையில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவு அதிகூடிய நிதியைச் சேகரித்து மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.இவ்வருடம் நடைபெற்ற புகைத்தல் எதிர்ப்புதின தேசிய கொடி விற்பனையில் 17,96,373. 00 ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளுமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸின் வழிகாட்டலில், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியின் ஒருங்கிணைப்பில் சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில், பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் என்.எம்.நௌஸாத்தின், இணைப்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகள் கூட்டாக இந்த நிதியைச் சேகரித்திருந்தனர்.
கல்முனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த நிதி சேகரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிதி சேகரிப்பில் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தில் பதினாறு கிராம சேவகர் பிரிவுகளில் பத்து இலட்சத்து ஆயிரத்து அறுநூற்று எண்பத்தெட்டு ரூபாவும், மருதமுனை சமுர்த்தி வலயத்தில் எட்டு கிராம சேவகர் பிரிவுகளில் ஆறு இலட்சத்து என்பத்திரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்து ரூபாவும், நற்பிட்டிமுனை சமுர்த்தி வலயத்தில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்து முன்னூற்றைம்பது ரூபாவுமாக மொத்தம் பதினேழு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரத்து முன்னூற்று எழுபத்து மூன்று ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. மருதமுனை சமுர்த்தி வலயத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகர்தர் எம்.எஸ்.எம்.நாஸர் தலைமையிலான குழுவினர் முதலாமிடத்திலும், இரண்டா மிடத்திலும், மூன்றாமிடத்திலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சேகரிக்கப்பட்ட இந்த நிதி எதிர்காலத்தில் சமுர்த்தி சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு ,மலசலகூட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரண வசதி, வீடுகள் திருத்த வேலை, போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், வாழ்வாதார உதவி உள்ளிட்ட விடயங்களுக்கு செலவு செய்யப்படவுள்ளதாக கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.
பி.எம்.எம்.ஏ.காதர்-…
(மருதமுனை தினகரன் நிருபர்-)