Friday, May 3, 2024
Home » கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்: 1994-1996 காலத்துக்குரியவை

கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்: 1994-1996 காலத்துக்குரியவை

ராஜ்சோமதேவ அறிக்கையில் உள்ளதென்கிறார் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன்

by Gayan Abeykoon
February 23, 2024 6:56 am 0 comment

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1994 முதல் 1996  காலப்பகுதிக்குரியவையென, ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான வழக்கு நேற்று (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து பிறிதாக எடுக்கப்பட்ட  சகல பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை, நேற்று நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பகுப்பாய்வின்படி இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியை கொண்டிருக்கலாமென பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகிறது.

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள், அனேகமாக மார்ச்  04 இல்,  ஆரம்பிக்கப்படவுள்ளன.

இருப்பினும்,  அமைச்சினால் இதற்கான நிதி வழங்கப்படும் பட்சத்திலே  அகழ்வு நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.இதனால்,   மீண்டும் மார்ச் மாதம் 04 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்புக்கான காரணம் போன்றவை இன்னும் வௌிவராமல் நிலுவையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாங்குளம் குறூப் நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT