வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கை முற்போக்கானது | தினகரன்

வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கை முற்போக்கானது

புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கையை முற்போக்கானதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பார்க்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அவ்வறிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது இணக்கத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கை குறித்து தினகரனுக்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்துக்கான, வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கையானது,

சகலரதும் இணக்கப்பாட்டோடும் கடந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படுவதற்காகத் தயார் படுத்தப்பட்டது. அப்போதிருந்த சில அரசியல் சூழ்நிலைகளால் சமர்ப்பிக்கப்பட முடியாமல், சுமார் ஒன்பது மாதங்களின் பின்னர் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போதைய அரசியில் சூழ்நிலைகளால் அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட முடியாமற் போனாலும் பிரதான அறிக்கையின் உள்ளடக்கத்​தை மாற்ற வழிநடத்தல் குழுவினர் அனுமதிக்கவில்ல, மாறாக பிரதான அறிக்கை தொடர்பில் கட்சிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியினதும் அவதானங்கள் பிரதான அறிக்கையுடன் இணைக்கப்பட்டுமுள்ளன.

முதலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் பல கட்சிகள் பின்னர் மாறுபாடான கருத்துக்களை முன்வைத்துமுள்ளன. அனேக கட்சிகள் தாம் முன்னர் இணங்கியவற்றில் இருந்த மாறுபட்டதாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது கொள்கை சார்ந்த விடயங்களில் சில கரிசனைகளை முன்வைத்தது.

இரண்டு பிரதான கட்சிகளும் பிரதான அறிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் கூட்டமைப்பும் தனது இணக்கத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்கும் என நாங்கள் எங்கள் அவதானத்தில் கூறியிருக்கின்றோம். ஐக்கியதேசியக் கட்சியானது பிரதான அறிக்கையை ஏற்றுக்கொள்வதால் வேறெந்த அவதானத்தையும் மேற்கொள்ள வில்லை. லங்கா சுதந்திரக் கட்சி, தான் ஆரம்பத்தில் இணங்கியவற்றில் இருந்து மாறுபட்டமை இந்த இடைக்கால அறிக்கை வெளிவருவதில் தாமதத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

புதிய அரசியலமப்பு உருவக்கத்தில் பிரதான அறிக்கையே கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென்பது பேச்சு வார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே பிரதான அறிக்கை முன்னேற்றகரமானதாகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் பார்க்கப்படுகின்றது. ஆனால் பிரதான அறிக்கைக்கு இணக்கம் தெரிவித்த கட்சிகள் பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதைப்போன்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அது நிச்சயமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கரிசனைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது, என்று கூறினார்.

வாசுகி சிவகுமார்

 


Add new comment

Or log in with...