இந்தியாவின் விடை புரியாத மர்ம மரணங்கள்! | தினகரன்

இந்தியாவின் விடை புரியாத மர்ம மரணங்கள்!

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

சீதை மீது சந்தேகம் எழுந்தவுடனே இராமபிரான் அவரைத் தீக்குளிக்கச் செய்தார்.

கணவன் கோவலன் அபாண்டமாக கொல்லப்பட்டதை கண்ணகி நிரூபித்ததும், சந்தேகம் கொண்டு தீர்ப்பளித்த ஒரே காரணத்துக்காகத் தனக்குத்தானே மரணதண்டனை கொடுத்துக் கொண்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். இந்த நிகழ்வுகள் யாவும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளன.

ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில், பல நிகழ்வுகள் சந்தேகத்தை மேலும் மேலும் கிளறி விடுகின்றன. ஒரு சம்பவம் மட்டும் என்றாலும் ஏதோ நேர்ந்து விட்டது என்று தோன்றும். ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து ஒரே மாதிரியான மர்ம சம்பவங்கள் நேர்ந்தால், அத்தகைய அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போய் விடும்.

நூற்றுக்கணக்கான கோப்புகளில் கையெழுத்திட்டு விட்டதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி கூறியிருக்கிறார். திட்டங்கள் வேகமாக நடக்கின்றன என்றும் அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், மர்மமான பல சம்பவங்களுக்கு விடையே கிடைக்கவில்லை என்பதுடன், திடீர் திடீரென்று மர்ம மரணங்களும் தொடர்கின்றன.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், ஜெயலலிதாவின் ஓய்வு இல்லமான கொடநாடு பங்களாவில் காவலாளி திடீரென்று கொல்லப்படுகிறார். அது தொடர்பாக பொலிசார் தேடி வரும் கார்ச் சாரதி கனகராஜ் வீதி விபத்தில் இறக்கிறார். கொள்ளைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்ட சயான் என்பவர் குடும்பத்துடன் விபத்தில் சிக்குகிறார்.

1971ம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி டெல்லியில் நடந்த சம்பவத்தில் இன்னும் மர்மம் விலகிவில்லை. நாடாளுமன்ற வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைக் காசாளர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

"பிரதமர் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம். வங்கதேச அறக்கட்டளை நிறுவனத்துக்காக ரூபா 60 இலட்சம் பணத்தை அளிக்கும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார்" என்று யாரோ கூறியிருக்கிறார்கள். காசாளருக்கு இலேசாக சந்தேகம் வந்ததும், "இது பிரதமரே பேசுகிறார்" என்று மறுமுனையில் இருந்தவர் கூற, சில விநாடிகளில் அப்போதைய பிரதமரின் குரலைக் காசாளர் கேட்டார்.

இது அரசியல் பிரச்சினையாக வெடித்தது. காரணம், பிரதமரின் பெயரைச் சொல்லி யார் வேண்டுமானாலும் அரசு வங்கியிலிருந்து பணம் எடுக்கலாம் என்ற அளவுக்கு நடைமுறை ஆனது குறித்து காரசாரமாக கேள்விகள் எழுந்தன. அத்துடன் பிரதமரே இதுபோல் அரசு வங்கியிலிருந்து இதற்கு முன் எத்தனை முறை பணம் எடுத்தாரோ என்றெல்லாம் சர்ச்சை கிளம்பியது.

இந்திரா காந்திக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கூறப்படும் துறவி தீரேந்திர பிரம்மச்சாரி. இவர் இந்திரா காந்திக்கு யோகாசனம் கற்றுத் தந்தவர். யோகாசனம், ஆன்மிகம் ஆகியவற்றில் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டிய பிரம்மச்சாரி உலகின் பல நாடுகளில் பயணம் செய்தவர். அதே சமயம் சிவா துப்பாக்கித் தொழிற்சாலை என்ற ஆயுத உற்பத்தி ஆலையின் பங்குதாரராக இருந்தார். இது நாடு முழுவதும் பெரிய பிரச்சினையைக் கிளறியது. அது மட்டுமின்றி இது போல் அவரது பெயரில் இருந்த பல சொத்துகள் சட்டவிரோதமானவை என்றும் கண்டறியப்பட்டது. ரஷ்யாவில் ரஸ்புடீன் என்ற துறவியைப் போல இவரும் சித்திரிக்கப்பட்டார். ஆனால், இவர் ஜம்மு பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் விமானம் விபத்தில் சிக்கியதால் மர்மான முறையில் இறந்தார்.

ரமேஷ் அப்போது மேயராக இருந்த மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். சென்னையில் மேம்பாலங்களைக் கட்டியதில் பல கோடி நஷ்டம் மாநகராட்சிக்கு ஏற்பட மு.க. ஸ்டாலின் காரணமாக இருந்தார் என்று ஜெயலலிதா அரசு குற்றம் சாட்டியது. இதனிடையில் டி.ஜி. தெய்வசிகாமணி என்ற கட்டட ஒப்பந்ததாரர் தனக்கு அரசு ஒப்பந்தம் கிடைப்பதற்காக ரமேஷ் மூலமாக மேயர் மு.க. ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா. கிருட்டிணன் ஆகியோருக்கு ரூ. 7 கோடி கமிஷன் கொடுத்ததாக பொலிசில் புகார் கொடுத்தார். அதையடுத்து, ரமேஷ் கைது செய்யப்படலாம் என்று பேசப்பட்டது.

இச்சம்பவத்தை அடுத்து, 2001ம் ஆண்டு ஜூலை 16ம் திகதி ரமேஷ், அவரது மனைவி காஞ்சனா, மூன்று மகள்கள் விஷமருந்தி இறந்து கிடந்தனர். அவரது தற்கொலைக் குறிப்பில், தான் குற்றமில்லாதவன் என்றும், பொலிசார் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் புகார் கூறியிருந்தார். சமூகத்தில் தனக்கிருக்கும் பெயருக்கு களங்கம் ஏற்படுமே என்ற கவலையிலும், பொலிசார் சித்திரவதை செய்வதாலும் உயிரை மாய்த்துக் கொள்வதாக அவரது தற்கொலைக் கடிதத்தில் கூறப்பட்டது. அக்கடிதத்தை அவரே எழுதினாரா என்பது தெரியவில்லை. ரமேஷ் தற்கொலை செய்து கொண்டாரா, அவரது மரணத்தில் ஏதாவது மர்மம் இருக்கிறதா, அரசு ஒப்பந்தம் தொடர்பாக அவர் மூலமாகப் பணம் கொடுத்தாக தெய்வசிகாமணி கூறியதன் பின்னணி என்ன என்ற மர்மங்கள் இன்னும் விலகவில்லை.

நாட்டையே உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பெரிய மர்மம் இன்றும் விடுபடவில்லை. அதுதான் சாதிக் பாஷா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மரணம். அவரும் தற்கொலை செய்து கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதிக் பாஷா 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நண்பர் ஆவார். சாதிக் பாட்சா 'கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆ. ராசாவின் சகோதரர் கலியபெருமாள் என்பவர் கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். ராசா மத்தியில் அமைச்சர் ஆனதை அடுத்து இவரது தொழில் வேகமாக அபிவிருத்தி அடைந்தது.

2 ஜி வழக்கை விசாரித்து வரும் புலன்விசாரணை அதிகாரிகளுக்கு சாதிக் பாட்சா மீதும் கண் இருந்தது என்று கூறப்படுவதுண்டு. 2ஜி மூலம் கிடைத்த பணத்தை ஆ. ராசா கிரீன் ஹவுஸ் நிறுவனத்தில் போட்டு வைத்திருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு. இந்நிலையில், 2011ம் ஆண்டு மார்ச் 16ம் திகதி சாதிக் பாட்சா தனது இல்லத்தில் தூக்கிலிட்டு இறந்து கிடந்தார். அத்துடன், 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகவும் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குதாரராக கிரின்ஹவுஸ் புரமோட்டர் நிறுவனம் இடம்பெற்றிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் சாதிக் பாட்சாவின் மரணம் பல மர்மங்களுக்கு மடிச்சு போட்டிருக்கிறது. இவரது மரணம் தற்கொலையா இல்லையா என்பது இன்று வரையில் தெரியவில்லை.

இவ்வாறான மர்ம மரணங்களில் ஒன்றாகவே ஜெயலலிதாவின் மரணமும் அமைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் காவலாளி, கார்ச் சாரதி மரணங்களும் விடை தெரியாத மர்மங்களாகவே உள்ளன. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...