நாய்க்கடியினால் மட்டும் ஏற்படுவதல்ல விலங்கு விசர் நோய்

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஏ. சிவசோதி

2020 ஆண்டளவில் நீர் வெறுப்பு நோயை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்க திட்டமிட்டுள்ளது. வீடுகளிலும் நிறுவனங்களிலும் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்போர் பொறுப்புள்ள வகையில் அதனை வளர்க்காத பட்சத்தில் நீர் வெறுப்பு நோய் அல்லது விசர் நாய்க்கடிக்கு உள்ளாகும் தொகையைக் கட்டுப்படுத்த முடியாதென்று கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ. சிவசோதி தெரிவித்தார்.

உலக நீர் வெறுப்பு நோய் தினம் தொடர் பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று பேராதனையில் அமைந்துள்ள மேற்படி திணைக்கள சுற்று விடுதியில் நடைபெற்றது. அங்கு ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் டாக்டர் ஏ. சிவசோதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டாக்டர் டி. ஆர். ரி. ஜி. ரத்நாயக்கா மற்றும் பணிப்பாளர் டாக்டர் டிக்கிரி விஜேதாச உட்பட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

நீர் வெறுப்பு நோய் என்பது மிகக் கொடிய நோயாகும், இதனால் பாதிக்கப் பட்ட எவரும் பிழைக்க முடியாது. நீர் வெறுப்பு நோய்க்கு ஆளானவர்கள் மரணிப்பது 100 சதவீதமாகும். ஆனால நோய் வரும் முன் மிக இலகுவாக அதனை குணப்படுத்திக் கொள்ளமுடியும். 100 சதவீதம் குணப்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்து வரும் 2020 ஆண்டளவில் நீர் வெறுப்பு நோயை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக மூன்று முறைகள் பின்பற்றப்பட உள்ளது என்றும் கூறினார்.

முதலாவதாக நாட்டிலுள்ள 70 சதவீதமான நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல், இதற்கு அடுத்ததாக கட்டாக்காலி நாய்கள் உட்பட ஏனைய நாய்கள் பரவும் வீதத்தை கருத்தடை மூலமாகக் கட்டுப்படுத்தல்.

அத்துடன் ஏதேனும் காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் சிகிச்சை அளித்தலும், நீர் வெறுப்பு நோய் தொடர்பாக பொது மக்களை விழிப்படையச் செய்தல் ஆகிய முறைகளி னூடாக அதனை அடைய முடியும் என எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டல் வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டத்தில் 300 பாடசாலைகளில் ஒரு வேலைத் திட்டம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக சுமார் 15 வயது மாணவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் சிறுவர் கைநூல் ஒன்றை வெளியிட்டு அதில் ஒரு கதை மூலம் எமது மூலக்கருவை விளக்கியுள்ளோம். இதனை மும் மொழிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக விசர்நாய்க்கடி அல்லது நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்படுவோரில் 70 சதத்திற்கும் மேற்பட்டவர்கள் 15 வயதிலும் குறைவானவர்களாகும். எனவே அவர்களுக்கு சரியான சிகிச்சை உடன் வழங்கப்படாது விட்டால் இறப்பு ஏற்படுவது நிச்சயமாகும்.

பெரியவர்களைவிட சிறுவர்கள் செல்லப்பிராணிகளாக நாய் குட்டிகளை அரவணைப்பது அதிகமாகும். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவதும் அதிகமாகும்.

ஒப்பீட்டளவில் இந்தியாவில் வருடம் 20000 பேர் பாதிப்படையும் போது இலங்கையில் சுமார் 2000 பேர் அளவில் வருடம் பாதிப்படைகின்றனர்.

சிலர் நினைக்கலாம் விசர் நாய்க்கடி என்பது நாயுடன் மட்டும் தொடர்புடையது என்று. பொதுவாக விலங்குகளுடன் தொடர்புள்ள ஒரு நோயாகும்.

மேற்படி நோயினால் பாதிக்கப்பட்ட மிருகத்தின் உமிழ் நீர் போன்றவற்றால் மற்றவரையும் அந்நோய் பாதிக்கிறது. அதாவது இந்நோய் ஏற்பட்ட மிருகத்தின் மூளை படிப்படியாக செயல் இழக்கும் இதன் காரணமாக தசைத் தொகுதி படிப்படியாக செயலிழக்கும்.

எனவே தொண்டையின் கீழ் எந்த ஒரு உணவோ அல்லது தண்ணீரோ கீழ் இறங்க மாட்டாது. ஒளியைக் காணும் போது அதற்கு ஏற்ப கண் வில்லை ஒளியைக் கட்டுப்படுத்தாது. எனவே இருளை நோக்கி அந்த மிருகம் செல்லும். நீரைத் தேடி அலையும்.

ஆனால் நீரை அருந்த முடியாது. அதன் இயற்கை சமநிலை அற்றுப் போகும். இதனால் அது அசாதாரண நடத்தையை வெளிப்படுத்தும். மனிதனைத் தாக்கினாலும் நிலைமை அவ்வாறேயாகும்.

ஒரு மிருகத்திற்கு விசர் நோய் அல்லது நீ வெறுப்பு நோய் தாக்கியுள்ளது என்றால் அதன் நடத்தையில் சாதாரண நிலையை எதிர்பார்க்க முடியாது. அது அசாதாரண நிலையில் இருக்கும்.

 எனவே மனிதர்களைக் கண்டால் ஓடும். ஒரு மிருகம் மனிதனைக் கண்டதும் அவருக்கு அண்மையில் நெருங்கி வரலாம். அல்லது விளையாடலாம்.

இது அசாதாரண நடத்தையாகும். சீறிப் பாயும் மிருகம் அடங்கி இருக்கும். இந்நிலையில் சிறுவர்கள் அதனுடன் விளையாட முடியும். அப்போது அது கடித்து விட்டால் உமிழ் நீருடன் சேர்ந்து காயத்தினூடாக கிருமிகள் மனித உடலுக்குள் உட்புகுந்து விடும்.

அப்படி எவருக்காவது சந்தேகமான மிருகம் தாக்கி விட்டால் உடனே ஓடும் நீரில் சவற்காரம் போட்டு 15 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாகக் கழுவ வேண்டும். அதன் பின் அண்மித்த வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும்.

இங்கு காயத்தின் தன்மைக்கேற்ப வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பர். தலை போன்ற இடங்களில் கடி உண்டானால் மூளைக்கு சமீபமான இடம் என்பதால் கூடிய வீரியம் கொண்ட மருந்து தேவைப்படும்.

ஆழமற்ற சிறு கீறலுக்கும் மிக ஆழமான கீறலுக்கும் வித்தியாசமான சிகிச்சைகள் உண்டு. அவ்வாறு சிகிச்சை எடுக்காத பட்சத்தில் தாக்கிய மிருகம் நோய் கிருமியைக் கொண்டதாக இருப்பின் தாக்கப்பட்டவர் மரணிப்பது 100 வீதம் நிச்சயமாகும்.

எனவே செல்லப் பிராணிகளாயினும் சரி வளர்ப்புப் பிராணிகளாலும் சரியே அவற்றிற்கு தடுப்பூசி ஏற்றப்படுதல் வேண்டும்.

தடுப்பூசி ஏற்றப்படாத மிருகங்கள் தாக்கினால் அவதானம் தேவை. அவை அசாதாரண நடத்தையை வெளிப்படுத்தினால் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் சிகிச்சை அவசியம்.

இலங்கையைப் பொறுத்த வரை ‘ரெபிட்ஸ்’ என்றழைக்கப்படும் விசர் நாய்க்கடி அல்லது நீர் வெறுப்பு நோய் 95 சதவீதம் நாய்களினாலே ஏற்படுகிறது. மிகுதி பூனை, குரங்கு, கீரி, மர அணில் உட்பட மற்றும் சில விலங்குகளால் ஏற்படுகிறது.

மேற்படி பாதிப்பை ஏற்ப டுத்தும் மிருகங்களில் நாயின் மூலம் அதிக வீதம் நோய் பரவக் காரணமாக இருப்பது நாயுடன் பின்னிப் பிணைந் துள்ள வாழ்க்கை முறையாகும். பூனை போன்றவை கைகளாலே தாக்கும்.

ஆனால் நாய் அதிகம் வாயினால் கடிக் கும். அதேபோல் பாடசாலை செல்லும் சிறுவர்கள் பாடசாலை சூழலில் உணவுப் பொருள்களை எறிவதால் நாய்களின் நடமாட்டம் அதிகரிக்கும்.

காலப் போக்கில் மாணவர்கள் நாய்களுக்கென்றே உணவுகளை எடுத்துச் செல்வர். இவ்வாறு உணவு முறையால் பழக்கப்பட்ட நாய்கள் சிறுவர்களுடன் கூடிய தொடர்பை ஏற்படுத்துவதன் காரணமாக அதனால் பரவும் நோயின் விகிதமும் அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

நாய்களுக்கு தடுப்பு மருந்து ஏற்றுவது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஒன்று உள்ளது. அது மட்டுமல்லாது இதற்கான கால அட்டவணை உண்டு. உதாரணமாக வீட்டில் வளர்க்கும் நாய் என்றால் குட்டி ஈன்று ஒரு வாரத்தினுள் தடுப்பூசி ஏற்ற வேண்டும். பின்னர் மூன்று மாதத்தில் இரண்டாவது தடுப்பூசி ஏற்ற வேண்டும். பின்னர் ஒரு வருடத்தில் வருடாந்த ஊசி ஏற்ற வேண்டும். இப்படி ஒரு ஒழுங்கு முறை உண்டு.

ஏற்கனவே தாய் நாய்க்கு தடுப்பு ஊசி ஏற்றப்பட்டிருப்பின் அதன் குட்டி களுக்கு பிறிதொரு அட்டவணை உண்டு. இப்படியாக இவற்றை விளங்கி நாம் கரும மாற்றாவிட்டால் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது போகும்.

நீர் வெறுப்பு நோய் வந்தால் 100 சதவீதம் மரணம் ஏற்படும். அதனைத் தடுக்க முடியாது. அதேநேரம் நோய் வரும் முன் 100 சதவீதம் நோயைத் தடுக்க முடியும். இவை செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்போரது பொறுப்புள்ள கடமையாகும்.

வருடா வருடம் விசர் நாய்க்கடி காரணமாக 70,000 பேர் உலகளாவிய ரீதியில் மரணிக்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரை அது 20 ஆக உள்ளது.

2015 செப்டம்பர் 28 ஆம் திகதி முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை ‘விசர்நாய்க் கடி தடுப்பு வாரம்’ அல்லது ‘நீர் வெறுப்பு நோய் தடுப்பு வாரம்’ என்ற அறிவுறுத்தல் வாரம் ஒன்று மேற்கொள்ளப் படுகிறது.

 ஏனெனில் இவற்றை சரியாகத் தெரிந்து கொண்டால் 2020 ஆம் ஆண்டு முற்றாக இதனை ஒழிக்க முடியும். இது 100 சதவீதம் ஒழிக்கக் கூடிய ஒரு நோயாகும்.

‘ஒருங்கிணைந்து நீர் வெறுப்பு நோயை ஒழிப்போம்’ என்ற தொனிப் பொருளில் இது முன் எடுக்கப்படுகிறது. அரச திணைக்களங்கள், தனியார் துறையினர், அரச சார்பற்ற நிறுவனங்கள் என பலதரப்பினர் இதற்கு உதவி வருகின்றனர்.

முதன் முதலாவதாக விசர் நாய்க்கடிக்கு எதிரான வக்சீன் அல்லது தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்திய லூயி பாய்ச்சர் மரணித்த தினமான செப்டம்பர் 28 ஆம் திகதி உலக நீர் வெறுப்பு நோய் ஒழிப்புத் தினமாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தி உள்ளது.

உலக நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனீசியா, மலேசியா போன்ற நாடுகளில் இது கட்டுப்படுத்தப்பட்டாலும் சார்க் நாடுகளில் மரண வீதம் அதிகமாக உள்ளது.

வருடம் விசர் நாய்க்கடி வைத்தியத்திற் கான தடுப்பு மருந்திற்கு 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. இதனை முற்றாகக் கட்டுப்படுத்தினால் தடுப்பூசிக்காகச் செலவிடும் பணத்தில் 10 சதவீதம் மட்டுமே செலவாகும். மிகுதி 90 சதவீதத் தையும் வேறு துறைகளுக்கு செலவிடலாம். இலங்கை போன்ற நாடுகளில் தடுப்பூசி ஏற்றுதலுக்கு பாரிய அளவு பணம் செலவிடப்படுகிறது எனலாம்.

இலங்கையில் சுமார் 220 இலட்சம் மக்கள் வாழ்கின்ற நிலையில் சுமார் 30 இலட்சம் நாய்கள் உள்ளன. ஏறத்தாழ 8 மனிதருக்கு ஒருநாய் என்ற விகிதத்தில் காணப்படுகிறது.

இதனால் நாய்த் தொல்லை அதிகமாக இருப்பதுடன் விசர்நாய்த் தொல்லையும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் வளர்க்கும் நாய்கள் குட்டி ஈன்றதும் அவற்றைக் கொண்டு போய் பொது இடங்களில் விடும் நிலையை மாற்ற வேண்டும்.

இது நாய் வளர்ப்போரின் மற்றும் ஒரு கடமையாகும். இதுவும் விசர் நாய் கடிக்கு வழங்கும் ஒரு ஊக்குவிப்பாகிறது.

கடந்த ஜனவரி முதல் இதுவரை இலங்கையில் 17 பேர் அளவில் நீர் வெறுப்பு நோயால் மரணித்துள்ளதாகப் பதிவாகி உள்ளது.

காலப் போக்கில் இதில் அதிகரிப்பு ஏற்படலாம். நோய்க்கான அறிகுறிகள் தென்பட முன் தடுப்பூசி ஏற்றாவிட்டால் மரணம் ஏற்படுவது நிச்சயமாகும்.

பேராதனை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், நுவரெலியா போன்ற பல இடங்களில் விசர்நாய்க்கடி தொடர்பான சகல கட்டுப்பாடுகள், தடுப்பு முறைகள் தொடர்பான வசதிகள் உண்டு.

நீர்வெறுப்பு நோய் தொடர்பான தகவல்களைப் பெற வேண்டுமாயின் தொலைபேசி இலக்கம் 0772001085 (பணிப்பாளர் நாயகம் - வைத்தியர் ரட்நாயக்கா) அல்லது 0772001096 (மேலதிக பணிப்பாளர் டாக்டர் சிவசோதி) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

(அக்குறணை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...