ரமழான் நோன்பின் எதிர்பார்ப்பு என்ன?

இஸ்லாமிய வருடக் கணிப்பில் ஒன்பதாவது மாதமாக விளங்கும் ரமழானில் உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு எனும் ஆன்மீகக் கடமையில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். பகல் வேளைகளில் (உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளாமல்) நோன்பு நோற்று இப்தாரின் போது (சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு) குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாக தங்கள் நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

அல்லாஹ் நோன்பை இறுதி நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை அல் குர்ஆனே எடுத்தியம்பியுள்ளது.

அதனால் ரமழான் நோன்பின் நோக்கம், எதிர்பார்ப்பு மற்றும் அதன் பிரதிபலன்களை அல்குர்ஆன், ஸுன்னாவின் நிழலில் நோக்குவது அவசியம். அதன் ஊடாக நோன்பின் நோக்கத்திற்கும் எதிர்ப்பார்ப்புக்கும் அமைய ஈருலக வாழ்வுக்கும் ஏற்ப எம்மை புடம்போட்டு பக்குவப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இறையச்சம்

அந்த வகையில் அல்லாஹ்தஆலா, 'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளான்.
(அல் பகரா: 183,184)

இவ்வசனம் நோன்பு கடமையாக்கப்பட்டிருப்பதன் பிரதான நோக்கத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் எத்தனையோ ரமழான் மாதங்களை நோன்பு நோற்று இறை வணக்கங்களில் ஈடுபட்டபடி நாம் கடந்து வந்துள்ளோம். இருந்தும் அல்லாஹ் எதிர்பார்க்கும் அந்த இறையச்சம் எம்மில் ஏற்பட்டுள்ளதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரகாலமிது. இறையச்சம் என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாகும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும், எல்லா நேரங்களிலும் அந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.

இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இறை நம்பிக்கையாளர்களில் சிலர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது, தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அம்மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்பதற்காக அனைத்துத் தீமைகளையும் விட்டும் விலகி இருப்பர். ரமழான் முடிந்ததும் மீண்டும் தீமையான காரியங்களில் ஈடுபட அவர்கள் ஆரம்பித்து விடுகின்றனர்.

ஏனெனில் ரமழான் மாத நோன்பை உரிய ஒழுங்கில் அணுகாததன் வெளிப்பாடே அதுவாகும். ரமழானில் மாத்திரம் தான் இறையச்சம் அவசியம். அதன் பின்னர் விரும்பியபடி செயற்படலாம் என அல்லாஹ் குறிப்பிடவில்லை. இறையச்சம் என்பது மனிதனை ஈருலக வாழ்வுக்கு ஏற்ப புடம்போட்டு பக்குவப்படுத்துவதாகும். அதனால் ரமழானில் மாத்திரமல்லாமல் ஏனைய 11 மாதங்களிலும் இறையச்சம் பிரதிபலிக்கும் வகையில் வாழ்வை ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது அவருக்கு அருகில் அவருடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட, அவருக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவருடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவர் செய்யலாம். அவரை யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். இது நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப்பட்டுள்ளது என்று குறிக்கப்பட்ட நேர காலம் தவிர்ந்திருக்கின்றனர். அதனால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. யாரையும் ஏமாற்றவும் கூடாது, மோசடி செய்யவும் கூடாது என்ற இறையச்சம் நம்மில் ஏற்பட வேண்டும்.

இறைவணக்கங்கள்

இன்றைய காலகட்டத்தில் ரமழான் வந்து விட்டால் பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என அனைவருமே வணக்கசாலிகளாக ஆகிவிடுகின்றனர். பள்ளிவாசல்கள் நிரம்பி வழிகின்றன. சில நேரங்களில் ஐவேளைத் தொழுகைக்கு வழக்கமாக வருபவர்களுக்குக் கூட இடம் கிடைக்காது. அந்தளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதும். ஏனெனில் ரமழானில் செய்யக்கூடிய நற்காரியங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். அதனால் ஐவேளைத் தொழுகையில் தவறாது கலந்து கொள்வதோடு இரவில் நன்மையை எதிர்பார்த்து தூக்கத்தைத் தியாகம் செய்து நின்று வணங்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

மேற்கூறப்பட்ட ஹதீஸின்படி ரமழானில் ஆற்றும் காரியங்களுக்கு கிடைக்கப்பெறும் பிரதிபலன்கள் தெளிவாகிறது. என்றாலும் ரமழான் அல்லாத காலங்களிலும் இறை வணக்கங்களில் ஈடுபட தவறலாகாது. அதுவே அல் குர்ஆனினதும் நபி மொழிகளதும் அறிவிப்பாகும். அந்த வகையில்தான் அல் குர்ஆன், 'தொழுகையை நிலை நாட்டுங்கள், அவனையே அஞ்சுங்கள், அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறது. (சூரா: அன்ஆம் :72)

அல் குர்ஆன் ஒதுதல்

அதேநேரம் ரமழானில் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடித்து விட வேண்டும் என்று காட்டுகின்ற ஆர்வம் அக்கறை, ரமழான் அல்லாத ஏனைய நாட்களிலும் குர்ஆன் ஓதுவதில் ஏற்பட வேண்டும். 'அல் குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: திர்மிதி)

இதன்படி ரமழானிலும் ரமழான் அல்லாத நாட்களிலும் அல் குர்ஆனை ஒதுவதும் படிப்பதும் எவ்வளவு சிறப்பானதும் மகத்துவமானதுமான காரியம் என்பது தெளிவாகிறது. அதனால் அல் குர்ஆனை ஒதுவதிலும் அதனை விளங்கிக் கொள்வதிலும் அதன்படி வாழ்வொழுங்கை அமைத்துக் கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

ஏழைகளுக்கு உதவுதல்

மேலும் ரமழானில் ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் தானதர்மங்கள் செய்வதில் அதிக கவனம் செலுத்தும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் ரமழான் அல்லாத நாட்களில் இந்நிலையை அவதானிக்க முடியாதுள்ளது.

இந்நிலைமை மாற வேண்டும். ரமழான் அல்லாத நாட்களிலும் ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் தானதர்மம் செய்ய வேண்டும். நோன்பின் ஊடாக ஏழை எளிய மக்களின் பசி உணர்வைப் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கப்பெறுகிறது. ஏழை எளியவர்களுக்கு உதவும் மனநிலை மனிதர்களிடத்தில் ஏற்படவும் நோன்பு வழிவகுக்கிறது.

நாம் எவ்வளவு வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும், ரமழான் வந்து விட்டால், நம்மோடு யார் வம்புக்கு வந்தாலும் கூட, நான் நோன்பாளி என்று விலகிக் கொள்கிறோம்.

அதே போன்று ரமழான் முடிந்த பிறகும் செயல்பட நம்மை நாமே சீர்திருத்திக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் 'யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.' என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

அதனால் எல்லா நாட்களிலும் பொய்யான காரியங்கள் தடுக்கப்பட்டவை தான் என்பதை புரிந்து கொண்டு மற்ற நாட்களிலும் அவற்றை விட்டு விலகியிருப்பதோடு நன்மையான காரியங்களை ரமழானில் மாத்திரமல்லாமல் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும்.

அத்தோடு ரமழானில் மாத்திரமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அனைத்துத் தீமைகளை விட்டும் விலகியிருப்போம். ரமழானின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய வாழ்வொழுங்கை அமைத்துக்கொள்வோம்.

அல் ஹாபிழ், மௌலவி எம்.எச்.எம் சிப்கான்... 
B.A Hons (SEUSL)
ஆசிரியர், மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரி, பாலமுனை


There is 1 Comment

Very useful

Add new comment

Or log in with...