யாழ். மிரிசுவில்: பட்டா - புகையிரதம் விபத்து; 12 வயது சிறுவன் பலி

- தந்தை, மற்றுமொரு மகன் படுகாயம்
- பாதுகாப்பற்ற புகையிரத கடவை தொடர்பில் மக்கள் விசனம்

யாழ்ப்பாணம், மிரிசுவில் பகுதியில் இன்று (22) முற்பகல் 10.15 இடம்பெற்ற புகையிரதம் - பட்டா ரக வாகன விபத்தில்  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (12) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் (45) மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் (15) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதில் பட்டா ரக வாகனத்தில் பயணித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தையும் , சகோதரனும் படுகாயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த கடவையில் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் நிகழ்ந்து பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கற்களை கொண்டு ரயில் பாதையை மூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.இது தொடர்பாக சாவகச்சேரி பிரதேசசபை உபதவிசாளர் மயூரன் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடவை அமைக்கப்பட வேண்டும் எனவும் அல்லது காவலாளி நியமிக்கப்பட வேண்டும் எனவும் நீண்ட காலமாக கோரி வருகிறோம்.பிரதேசசபையில்  இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உரிய தரப்பிற்கு தெரியப்படுத்தியிருந்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.குறித்த கடவையில் சமிக்கை விளக்கு உள்ள போதிலும் அதை மறைக்கும் விதமாக மரம் ஒன்று காணப்படுகிறது.அதை அகற்ற கோரியும் நடவடிக்கை எதுவுமில்லை.தொடர்ச்சியாக இந்த ரயில் கடவையில் விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதால் சினமடைந்த மக்கள் ரயில் பாதையில் கற்களை போட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.குறித்த ரயில் கடவைக்கு காவலாளி நியமிக்கப்பட வேண்டும் அல்லது பாதுகாப்பு கடவை அமைக்க வேண்டும்.அதற்கான நடவடிக்கை எடுக்கும் வரை புகையிரதம் பயணிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் அளவ்வ பகுதியில் கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் அளவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர், சாவகச்சேரி விசேட நிருபர்


There is 1 Comment

Very sad news, Tamil politicians, parliamentarians, provincial and local councils must be held accountable for every incident and death. If they can't even find a solution to the railway crossing, how can they solve other major problems? What is the use of holding positions and chairs ??

Add new comment

Or log in with...