மலையக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் எதிர்நோக்கும் சவால்கள்

இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித்தருவதில் மலையகம் முக்கிய பங்கு வகிக்கின்றனது.இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட மலையகம் வறுமைக்குட்பட்ட மக்களை அதிகம் கொண்ட பகுதியாகவும், கல்வியில் பின்தங்கிய சமூகம் வாழும் பிரதேசமாக அமைந்துள்ளது. கல்வியில் மாணவர்கள் உயர் தரத்தை தாண்டுவது குறைவாக உள்ளபோதிலும், கடந்த சில ஆண்டுகளாக மலையக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் வீதமும் ஓரளவு உயர்ந்துள்ளது.

இவ்வாறு உள்வாங்கப்படும் மாணவர்கள் கலை பிரிவையே அதிகமாக தெரிவு செய்கின்றனர். அதற்கு அடுத்ததாக வர்த்தகத்துறையை தெரிவு செய்யும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். மலையக மாணவர்களில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவோரில் விஞ்ஞான கற்கைகள் சார் பீடங்களை சேர்ந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் மலையக பகுதியில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. குடும்ப வறுமை , காலநிலை பிரச்சினை, உள ரீதியான பிரச்சினைகள் என்றெல்லாம் பல்வேறு சவால்களை அவர்கள்கடக்க வேண்டியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையக மாணவர்கள் எதிர்கொள்ளும் முதற்கட்ட பிரச்சினை குடும்பத்தின் வருமானம் போதாமையே ஆகும். பொதுவாக மலையகத்தைப் பொறுத்தவரை பெற்றோர் இறப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிபவர்களாவர். சிலர் அன்றாடம் வருமானம் கிடைக்கும் வகையில் கூலித்தொழில் செய்து வருபவர்களாவர். இவ்வாறு உழைக்கும் ஒரு தொகை பணம் அவர்களது குடும்ப செலவுக்கே போதாமல் உள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் சராசரியாக 20,000 ரூபா செலவு ஏற்படுகிறது.

அந்நிலையில் அத்தனை பெரிய தொகையை பெற்றோரால் மாதாந்தம் வழங்க முடியாத அவல நிலை காணப்படுகிறது. சில மலையக குடும்பங்களின் மாத வருமானமே 20,000 தொடக்கம் 25,000 ரூபாவாக மட்டுமே உள்ளது.

இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் எதிர்நோக்கும் மேலதிக செலவுக்கான தொகையைப் பெற்றுக் கொள்வதில் இம்மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுக்கின்றனர். இதன் விளைவினால் பட்டப்படிப்பை இடையில் கைவிட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அம்மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

போக்குவரத்து பிரச்சினையும் இவர்களுக்கு பிரதானமானதேயாகும். மாணவர்கள் மலையகத்திற்கு அண்மையில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக செல்வதற்கு தயங்குவதால், தூரப் பிரதேச பல்கலைக்கழகங்களுக்கு

கல்விக்காக செல்கின்றனர். இதனால் இம்மாணவர்கள் போக்குவரத்து

பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அத்தோடு மலையகத்தின் பெரும்பாலான வீதிகளில் புனரமைக்கப்படாமையினாலும், கிராமப் பகுதிகளிலிருந்து பிரதான நகருக்குச் செல்ல பஸ் சேவை இல்லாமையினாலும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகிறது.

மலையக மாணவர்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு பிரச்சினை அவர்களது சமூகம் சம்பந்தப்பட்டதாகும்.

அதாவது அவர்களுக்கு பல்கலைக்கழகமானது புதிய சூழல் ஆகும்.அங்கு சந்திக்கின்ற ஏனைய சமூகத்தினரின் பழக்க வழக்கம், கலாசாரம், பண்பாடு போன்றவை மாறுபட்டுள்ளதால் மலையக மாணவர்கள் சவாலையும் சங்கடத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.

உணவும் மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது. ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழ்கின்ற மக்களின் வெவ்வேறு விதமான உணவுப் பழக்க வழக்கங்களால் புதிய உணவு முறையை பழக்கப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்.

மலையக மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் மொழி மற்றும் தொழில்நுட்ப அறிவில் குன்றியவர்களாகவும் காணப்படுகின்றனர்.

அத்தோடு மலையக பாடசாலைகளில் கணினி, ஆங்கிலம் மற்றும் சிங்களம் தொடர்பான அறிவு அவர்களுக்கு குறைவு. எனவே பல்கலைக்கழகத்தில் புகட்டப்படும் கற்கைகளை புரிந்து கொள்வதற்கும், செயற்பாட்டு ரீதியாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் சிக்கலை எதிர் நோக்குகின்றனர். பல்கலைக்கழகங்களில் அநேகமான கல்விசார் நடவடிக்கைகள் ஆங்கிலம், கணினி

போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதற்கு இசைவாக்கம் அடைவதும் சிரமமாகும்.

மேலும் மலையகத்தின் காலநிலையானது குளிர், வெயில், மழை என்பன இணைந்ததாகும். ஆனால் கல்வி நடவடிக்கைகளுக்காக வேறு பிரதேசங்களுக்கு ெல்வதனால் காலநிலை மாற்றம், உடல் ரீதியான பல தாக்கங்களை அவர்கள் சந்திப்பதற்கு நேரிடுகின்றது. அவர்கள் தோல் ஒவ்வாமை, கை, கால் தோல் வெடிப்பு, முடியுதிர்வு, உடல் நீர் சமநிலை இழப்பு போன்ற அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

உளவியல் ரீதியிலும் பலவித பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிலைக்கு மலையக மாணவர்கள் உள்ளாகின்றனர். மலையக மக்கள் ஏனைய இனங்களால் புறக்கணிக்கப்படுவதாகவும் சரிசமமாக நடத்தப்படுவதில்லை எனவும் நிலவுகின்ற வேதனையான கருத்துக்களில் உண்மை இல்லாமல் இல்லை.

இந்த ஒதுக்கல் மனோபாவம் உளவியல் ரீதியான பல்வேறு பாதிப்புகளை மலையக மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது. வறுமை நிலைக்கு உட்பட்டவர்கள் என மற்றவர்களால் நோக்கப்படுதல் தாழ்வு மனப்பான்மை, பிரதேச வேறுபாடு, குடும்ப நிலை போன்றவற்றால் உள ரீதியான பிரச்சினைகளுக்கு இவர்கள் முகம் கொடுக்கின்றனர்.

இவை அனைத்தையும் விட முக்கியமான பிரச்சினை தொழில் வாய்ப்பு சந்தையில் போட்டியிட முடியாது போவதாகும். இம்மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பு தவிர, ஏனைய பாட நெறிகளை வெளியில் சென்று கற்பதற்கான போதியளவு வருமானம் இல்லாததால் பட்ட சான்றிதழுடன் மட்டும் வெளியேறுகின்றனர். எனவே வேலைவாய்ப்புச் சந்தையில் தகுதி போதாதென முத்திரையிடப்பட்டு புறம் தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு மலையகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் பலவிதமான இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவற்றினை நிவர்த்தி செய்வதானால் மலையகத்தில் தங்களுக்கென்று தனியான பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும்.

இதற்கு அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் மலையக மாணவர்கள் கல்வியில் உயர் நிலையை அடைய முடியும்.

மேலும் மலையகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி கற்கும் பிள்ளைகள் அதிகமுள்ள குடும்பங்களுக்கு உதவி திட்டங்களை அறிமுகம் செய்தல், உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், மற்றும் மாணவர்களின் பாடசாலை காலத்திலேயே மொழி மற்றும் தொழில்நுட்ப ரீதியான அறிவினை வழங்க கல்வி அமைச்சும், ஆசிரியர் அதிபர் குழாமும் முன்வரவேண்டும்.

ஆர். ரெஜீனா
4ஆம் வருடம்
ஊடக கற்கைகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்


There is 1 Comment

மலையக மக்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்று நிலங்களில் குடியேறி விவசாயத்தில் ஈடுபடவேண்டும். அங்குள்ள பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க விடவேண்டும். அங்குள்ள மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழ்ந்தால். அவர்களின் அடுத்த தலைமுறையாவது மேல் கூறப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடும்.

Add new comment

Or log in with...