கொவிட் 19 துயர் துடைக்கும் நிதியத்துக்கு பங்களிக்கும் பத்து வயது சிறுவன் கிருஷ் | தினகரன்

கொவிட் 19 துயர் துடைக்கும் நிதியத்துக்கு பங்களிக்கும் பத்து வயது சிறுவன் கிருஷ்

கொழும்பு மத்திய இன்னர் வீல் சங்கம் அண்மையில் 'கிட்ஸ் பார் எஸ் எல்  - இலங்கைக்காக சிறுவர்கள்' என்ற முயற்சிக்கு தங்களது அனுசரணையை வழங்கியது. kids4sl.com என்ற இந்த இணையத்தளம் சார்ந்த நிதி சேர்க்கும் முயற்சி பத்து வயது சிறுவனாகிய கிருஷ் சிவகணநாதனால் ஆரம்பிக்கப்பட்ட நன்முயற்சியாகும். 

'இன்னர் வீல்' ஒரு பெரும் உலகளாவிய, தன்னார்வமுடைய பெண்களுக்குரிய சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் சமூக சேவை, நட்பு பாராட்டல் போன்ற உயரிய நோக்கங்களுக்காக பல்லாண்டுகளாக உழைத்து வருகிறது. இன்னர் வீல் மத்திய கொழும்பு கிளையானது 40 ஆண்டுகால மக்கள் சேவையை இவ்வாண்டு கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

சிறுவர், சிறுமியர் வீட்டிலே முடங்கிக் கிடக்கும் கொரோனா தொற்று காலத்தில், அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் விரும்பிய ஒரு விளையாட்டையோ அல்லது படம் வரைதல், வாசித்தல், போன்ற ஒரு முயற்சியையோ செய்வதற்கு அவர்கள் உறுதியெடுத்துக் கொண்டு அதை செய்து முடிக்கும் போது அவர்களுடைய பெற்றோர், நண்பர்களின் அனுசரணையையாக ஒரு தொகையை சேகரித்து அரசின் கொவிட் 19 துயர் துடைக்கும் நிதிக்கு பங்களிப்பதே இவர்களின் நோக்கமாகும்.நூறு வயதைத் தாண்டிய டொம் மூர் என்ற ஆங்கிலேயர் 20 நாட்கள் தொடர்ந்து நடப்பதன் மூலம் கோடிக்கான பணத்தை இங்கிலாந்து அரசின் சுகாதார நிதிக்கு சேர்த்துக் கொடுத்ததையும், கிருஷினுடய சித்தப்பா நாதன் சிவகணநாதன் இலங்கையின் இரண்டு துருவங்களுக்குமிடையே நடந்து புற்றுநோய் சிகிச்சைக்கான வைத்தியசாலைகளை கட்டியதையும், தனது முன்னுதாரணமாக் கொண்டுதான், பத்தே வயதான கிருஷ் மற்றும் அவனது சகோதரன் டாஷ் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அவர்களிருவருடைய முயற்சி 100 கிலோ மீற்றர் தூரத்தை சைக்கிளில் 20 நாட்களுக்குள் பயணிப்பதாகும்.

இவ்வாறு பல குழந்தைகளையும் கிருஷின் இந்த இணையத்தளம் நற்காரியத்திற்காக ஒன்று சேர்த்து 5 இலட்சத்திற்கும் மேலான பணத்தை சேர்க்க உதவியுள்ளது. இந்த நிதி முழுவதாக இலங்கை அரசின் கொவிட் 19 சமூக நல நிதிக்காக சேர்க்கப்படுகிறது.


There is 1 Comment

Amazing young man. Wish kids of that age can think and act. Great initiative and all the best

Add new comment

Or log in with...