ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களால் ஏற்படும் காலதாமதம் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று முன்தினம் திடீர் விஜயம் செய்து, அங்குள்ள நிலைமையை அவதானித்தார்.
இதன்போது விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் பிரிவு பணியாளர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
விமான தாமதம் மற்றும் குறைபாடுகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
விமான பயணத்தில் காலதாமதம் ஏற்படுவது தொடர்பாக 24 மணிநேரமும் பயணிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கவும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பயணிகளுக்கு அதிகபட்சமான வசதிகளை வழங்கவும் இதற்காக விமான நிலையம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவை விமான நிலைய வளாகத்தில் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார். மேலும் காலதாமதத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதேவேளை பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்துச் செய்யப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் விமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை சீர்செய்வதற்கு தமது குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வழக்கமான விமான பயண அட்டவணையை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சி எடுத்துள்ளதாகவும், விமான நிறுவனம் தெரிவித்தது.