Home » வரலாற்றுத் தகவல்களில் அற்புதமான அறிவுரைகள்

வரலாற்றுத் தகவல்களில் அற்புதமான அறிவுரைகள்

by Gayan Abeykoon
November 8, 2024 9:00 am 0 comment

அல்லாஹ் அல் குர்ஆனில் யூசுப் நபி (அலை) அவர்களின் சரித்திரத்தை குறிப்பிடும் போது, “(நபியே!) வஹீ மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இக்குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள்” (அல் குர்ஆன் 12:3) என்ற அடைமொழியோடு குறிப்பிட்டுள்ளான்.

அல் குர்ஆனில் யூசுப் (அலை) அவர்களின் முழு சரித்திரமும் ‘சூரத்து யூசுப்’ என்ற ஒரே அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது.

அல் குர்ஆனில் மற்ற நபிகளின் சரித்திரம் சொல்லப்பட்டு இருந்தாலும், அது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காணப்படுகிறது. ஒரே அத்தியாயத்தில் சொல்லப்படவில்லை.

குறிப்பாக யாகூப் (அலை) அவர்கள் ‘மிஸ்ர்’ (எகிப்து) நாட்டில் வாழ்ந்து, அங்குள்ள மக்களுக்கு ஏக இறைக்கொள்கையைப் போதித்து வந்தார்கள். அவர்களுக்கு முதல் மனைவியின் மூலம் பத்து ஆண் குழந்தைகளும், இரண்டாவது மனைவியின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. இரண்டாம் மனைவிக்கு யூஸுப் (அலை) அவர்களும் புன்யாமீனும் கிடைக்கப்பெற்றார்கள்.

யாகூப் (அலை) அவர்கள், யூசுப் நபி மற்றும் புன்யாமீன் ஆகிய இருவர் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் யூசுப் நபி பேரழகனாகத் திகழ்ந்தார்.

ஒரு நாள் யூசுப் நபி தன் தந்தையிடம் வந்து, “தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும், எனக்கு சிரம் பணிய மெய்யாகவே கனவு கண்டேன்” (அல் குர்ஆன் 12:4) என்று கூறினார்கள்.

இக்கனவின் பொருளை தன் ஞானத்தால் அறிந்து கொண்ட யாகூப் நபி தன் மகனிடம், “என் அருமை குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில் நிச்சயமாக சைத்தான் மனிதனுக்கு பயங்கரமான எதிரி ஆவான். சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்” என்று கூறினார்.

(அல் குர்ஆன் 12:5)

“மேலும், இ(க்கனவில் நீ கண்ட)து போன்றே நடைபெறும். உன் அதிபதி உன்னைத் (தனது பணிக்காக) தேர்ந்தெடுப்பான். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்துகொள்ளும் முறையை உனக்குக் கற்றுத்தருவான். இதற்கு முன்னர் உன் மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உன் மீதும், யாகூப் நபியின் குடும்பத்தினர் மீதும் நிறைவு செய்வான். திண்ணமாக, உன் இறைவன் நன்கறிந்தவனும், நுண்ணறிவாளனும் ஆவான்” (அல் குர்ஆன் 12:6) என்று அறிவுரை வழங்கினார்.

நாட்கள் செல்லச்செல்ல யூசுப் நபி மீது தங்கள் தந்தை அதிக பாசத்துடன் இருப்பதையும், தங்கள் மீது பாராமுகமாக இருப்பதையும் மற்ற சகோதரர்கள் உணர்ந்தனர். இதனால் அவர்கள் யூசுப் நபி மீது பொறாமை கொண்டனர். எனவே அவரை கொலை செய்ய அவர்கள் திட்டம் தீட்டினார்கள். இதன்படி யூசுப் நபியை தங்களுடன் காட்டுப் பகுதிக்கு விளையாட அழைத்துச்செல்ல தந்தையிடம் அனுமதி கேட்டனர்.

இந்த சதித்திட்டத்தை அறியாத யாகூப் (அலை) அவர்கள் அவர்களின் சொல்லுக்கு செவி சாய்த்தார்கள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சகோதரர்கள் யூசுப் (அலை) அவர்களை அழைத்துச் சென்று பாழடைந்த கிணறொன்றில் தள்ளி விட்டனர்.

அதன் பின்னர் வீடு திரும்பிய யூஸுப் (அலை) அவர்களின் சகோதரர்கள்,  தன் தந்தையிடம் ‘காட்டில் ஓநாய் ஒன்று யூஸுபை கொன்று விட்டது’ என்று கூறினர்.

யாகூப் (அலை) அவவர்கள், ‘எனது அருமை மகனை இழந்து விட்டேன். இது அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கும் பட்சத்தில் அவன் மீது நம்பிக்கை கொண்டு பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். இதுவும் நிச்சயமாக நன்மைக்காகவே நிகழ்ந்திருக்கிறது’ என்றார்கள்.

‘பெரும் இழப்பிலும் பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை உறுதியோடு அதிகப்படுத்த வேண்டும்’ என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு  பாடமாகும்.

அதேநேரம் சிறுவர் யூஸுப் (அலை) அவர்கள் தள்ளிவிடப்பட்டிருந்த காட்டு வழியே வந்த வியாபார கூட்டமொன்று கிணற்றில் அழகிய சிறுவன் ஒருவன் இருப்பதைக் கண்டு, அவனை கிணற்றில் இருந்து மீட்டெடுத்தனர். பின்னர் அச்சிறுவனை தம்மோடு எகிப்துக்கு அழைத்து சென்ற அக்கூட்டத்தினர், அவரை எகிப்தின் சந்தையில் அடிமையாய் விற்பனை செய்து விட்டனர்.

அன்றைய எகிப்து நாட்டின் அரசர் அஜீஸ், யூசுப் நபியை ஏலத்தில் எடுத்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின் தன் மனைவியை நோக்கி, “நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள். அவரால் நாம் நன்மையடையலாம் அல்லது அவரை நாம் நம் வளர்ப்பு மகனாக்கிக் கொள்ளலாம்” என்றார்

(அல் குர்ஆன் 12:21).

‘இவ்வாறு யூசுப் (அலை) அவர்கள் தான் கண்ட கனவை நிஜப்படுத்தும் பொருட்டு இந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தோம்’ என்று திருமறையிலே தொடர்ந்து வரும் வசனங்களில் இறைவன் தெளிவுபடுத்துகிறான். தந்தையைப் பிரிந்து வந்த துக்கத்தை மறக்கடிக்க அரச குடும்ப பின்னணியில் வாழக் கூடிய மாபெரும் கிருபையை அல்லாஹ் யூசுப் (அலை) அவர்களுக்கு வழங்கினான்.

‘எந்தவொரு தீமைக்குப் பின்னாலும் நாம் அறியாத ஒரு நன்மையை இறைவன் வழங்குவான்’ என்பதை அல்குர்ஆன் இங்கு எடுத்தியம்புகிறது.

காலங்கள் கடந்தன. யூசுப் (அலை) அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்விலும் படிப்பினைகள் இருக்கவே செய்கிறது.

ஒருமுறை எகிப்தின் அரசன் ஒரு கனவு காண்கின்றான். பின்னர் அரசவையைக் கூட்டி தன் கனவுக்கான விளக்கத்தை கேட்டான்.

“நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன. மேலும் பசுமையான ஏழு தானியக்கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அவையோரே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாக இருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!” என்று கூறினார்.    (அல் குர்ஆன் 12:43)

அதற்கு அவர்கள், “இது அஜீரணத்தாலும், சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட வீணான கனவு தான். இத்தகைய வீண் கனவுகளுக்கு விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்கள் அல்ல” என்று கூறினர்.  (அல் குர்ஆன் 12:44)

அதன்பின் கனவுக்கு விளக்கம் சரியாய் அளிக்கக் கூடிய யூசுப் (அலை) அவர்களை அணுகி அதன் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு யூஸுப் (அலை) அவர்கள்,  ‘தொடர்ந்து வழக்கம் போல் நல்லவிதமாக ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சலில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத் தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிரிலேயே விட்டு வையுங்கள்.”

“அதற்குப் பின்னர் கடினமான பஞ்சத்தையுடைய ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் விதைப்பதற்கு வேண்டிய சொற்ப அளவைத் தவிர நீங்கள் சேமித்திருந்த அத்தனையையும் அப்பஞ்சம் தின்று விடும்.”

(அல் குர்ஆன் 12:47,48)

யூசுப் நபி சொன்னது போல் நடக்கவே மனம் மகிழ்ந்த அரசர் அவரை சிறப்புக்குரிய மந்திரியாக நியமித்து பெருமைப்படுத்தினான்.

யாகூப் நபிகளின் குடும்பமும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு மிஸ்ர் தேசம் வந்து உதவிப்பொருட்களை பெற்றனர். அப்போது, கருவூலத்தின் அதிபதி தன் சகோதரர் யூசுப் நபி என்பதை அறிந்த அவரது மூத்த சகோதரர்கள் தங்கள் செயலுக்கு பாவமன்னிப்பு கோரினார்கள்.

இப்படி யூசுப் (அலை) அவர்களின் சரித்திரம் மூலம் அல்லாஹ் எண்ணற்ற படிப்பினைகளை அறிவுரைகளாக அளித்திருக்கின்றான். பொறாமை கொள்ளக்கூடாது, ஏழ்மையிலும் நன்மை செய்ய வேண்டும், துன்பத்திலும் பொறுமையை கையாள வேண்டும், நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது என்பன அவற்றில் குறிப்பிடத்தக்க படிப்பினைகளாகும்.

ஆகவே துன்பத்திற்குப் பின் நன்மை வந்தே தீரும், எந்த நிலையிலும் அல்லாஹ் ஒருவனிடமே நம்பிக்கையை உறுதியாய் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையும் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகளை கடைப்பிடிக்கும் போது நிச்சயம் நாம் நமது வாழ்வில் வெற்றி பெறுவோம்.

அப்துர் ரஹ்மான்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT