ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் போட்டி இன்று ஹொங்கொங்கின் கினொங் டின் ரோட் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (1) தொடக்கம் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அணிக்கு அறுவர் கொண்டு ஐந்து ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் இலங்கை உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னரே அந்தத் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் இலங்கை அணி முதல் சுற்றில் பி குழுவில் ஓமான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை அணியின் முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டும் இன்று நடைபெறவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று காலை 8.45 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஓமான் அணியை எதிர்கொள்ளும் இலங்கை, பிற்பகல் 2.10 இற்கு பங்களாதேஷ் அணியுடன் மோவுள்ளது.
இலங்கைக் குழாத்தில் லஹிரு சமரகோன், நிமேஷ் விமுக்தி, சதுன் வீரக்கொடி, தனஞ்சய லக்ஷான், தரிந்து ரத்னாயக்க மற்றும் தனுக்க தாபரே ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணித் தலைவராக லஹிரு மதுஷங்க செயற்படுகிறார்.
சில வித்தியாசமான விதிகளுடனேயே இந்தப் போட்டி நடைபெறுகிறது. குறிப்பாக நோபோல் பந்துக்கு இரண்டு ஓட்டங்கள் வழங்கப்படுவதோடு துடுப்பாட்ட வீரர் ஒருவர் 31 ஓட்டங்களை அடைந்தால் ஆட்டமிழக்காது அரங்கு திரும்புவார். பின்னர் ஐந்து விக்கெட்டுகளும் இழந்தால் அந்த வீரருக்கு மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்க முடியும்.
மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும் ஆரம்ப சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.