மு ஸ்லிம்களின் வாழ்வோடு என்றும் பின்னிப்பிணைந்த இடம் தான் மஸ்ஜிதாகும். அது அருள் நிறைந்த இடம், அமைதியும் பக்தியும் பிரவாகிக்கும் இடம், மலக்குகள் ஆஜராகும் இடம். எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் மஸ்ஜிதுடன் பலமானதும் உணர்வுபூர்வமானதுமான உறவைப் பேணிக்கொள்ளல் வேண்டும். அது ஈமானின் வெளிப்பாட்டிற்கான ஓர் அடையாளமாகும். மறுமையில் ஈடேற்றம் பெறுவதற்கான வழியும் கூட.
இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
‘எவருடைய உள்ளம் மஸ்ஜிதோடு நெருக்கமாக பிணைந்திருக்கின்றதோ அவர் மறுமையில் அர்ஷின் நிழலின் கீழ் இருப்பார்’
(ஆதாரம் புஹாரி)
அதேநேரம் அருள்மறையாம் அல் குர்ஆன், ‘நிச்சயமாக மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ‘(72:18) என்று குறிப்பிட்டுள்ளது.
அல்லாஹ் மஸ்ஜிதுகளின் அந்தஸ்தை உயர்த்தியும் மகிமைப்படுத்தியும் அவற்றை தனக்கே உரியன எனவும் குறிப்பிட்டிருப்பதும் இவ்வுலகில் தனக்கு மிகவும் விருப்பத்துக்குரிய இடம் மஸ்ஜிதே எனச் சிலாகித்துக் கூறியிருப்பதும் அதன் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான சிறப்புக்கள் நிறைந்த இறை இல்லங்களின் புனிதத்துவத்தைப் பேணுவதும் அதற்கே உரித்தான கண்ணியத்தை வழங்குவதும் அதைப் பாதுகாப்பதும் எமது கடமையாகும்.
மஸ்ஜிதுகள் என்பது இறைவனுக்காக வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளும் புனிதமான இடங்களாகும். தொழுவது, அல்லாஹ்வை நினைவு கூர்வது, அல்குர்ஆனை ஓதுவது போன்றன அங்கு இடம்பெற வேண்டிய மிக முக்கிய இபாதத்களாகும்.
‘அவ் வீடுகளில் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் கூறவும், அதை கண்ணியப்படுத்தவும் அவன் கட்டளை இட்டிருக்கின்றான் .’
(அல் குர்ஆன் 24:36)
நபி (ஸல்) அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகையில், ‘ நிச்சயமாக அவை மஸ்ஜிதுகள் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்கும் தொழுவதற்கும் அல்குர்ஆனை ஓதுவதற்குமான இடங்களாகும்.’ (ஆதாரம்: முஸ்லிம்) என்றுள்ளார்கள்.
இஸ்லாத்தில் எந்தவொரு இடத்திற்கும் இல்லாத முக்கியத்துவமும் புனிதத்துவமும் மஸ்ஜிதுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே தான் மஸ்ஜிதுக்குள் நுழைந்ததும் ஒருவர் காணிக்கையாக இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளுமாறு நபி (ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.
‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழாமல் மஸ்ஜிதில் அமர வேண்டாம்.’
(ஆதாரம்: புஹாரி)
வெள்ளிக்கிழமை தினமொன்றில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்த வேளை மஸ்ஜிதினுள் நுழைந்து உட்கார்ந்த ஸுலைக்கா அல் அத்பானி (ரழி) என்ற ஸஹாபியை நோக்கி இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு அமருங்கள் எனக் கட்டளை பிறப்பித்தார்கள். அதனால் மஸ்ஜிதுக்குள் நுழையும் ஒருவர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது ஸுன்னத்தான செயலாகும். ஆனால் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைபவர் இத்தொழுகைக்குப் பதிலாகத் தவாப் செய்தாலே அதற்குரிய தஹிய்யதுல் மஸ்ஜித் ஆகும்.
மஸ்ஜிதினுள் நுழைபவரது உடலும் உடையும் தூய்மையாக இருக்க வேண்டும். நஜீஸுடனோ, துர்வாடைகளுடனோ நுழைவதை இஸ்லாம் தடுத்துள்ளது.
‘ஆதமுடைய மக்களே மஸ்ஜிதுகளில் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். ‘(7:31) என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
‘நீங்கள் வெள்ளை நிற ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுவே உங்கள் ஆடைகளில் மிகவும் சிறப்பானதாகும். மேலும் உங்களில் மரணித்தவர்களை அதனால் கபன் செய்யுங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அபூதாவுத்)
உங்களில் எவரேனும் மஸ்ஜிதுக்கு வந்தால் அவர் முதலில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். பிறகு வலது காலை வைத்து அல்லாஹும்ம அப்கதஹ் லீ அப்வாப ரஹ்மதிக்’ – ‘இறைவா எனக்கு நீ உன் கருணையின் வாசலைத் திறந்து வைப்பாயாக’ என்று பிரார்த்திக்க வேண்டும். (ஆதாரம்: முஸ்லிம்)
மஸ்ஜிதினுள் இருந்து வெளிச் சென்றால் முதலில் இடது காலை வைத்து அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின்பழ்லிக்’ – ‘இறைவா நான் உனது அருளை உன்னிடம் வேண்டுகின்றேன். என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்’ என்றும் நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
மஸ்ஜிதுகள் இறையில்லங்கள்அங்கு அமைதியாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளவதும் அதன் கண்ணியத்தை பேணி நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
ஒரு முறை மஸ்ஜிதுன் நபவியில் இரண்டு மனிதர்கள் சத்தமிட்டுக் கதைத்துக் கொண்டிருந்ததை உமர் (ரழி) அவர்கள் கண்டார்கள். அவர்களைத் தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார்கள். அவர்களை அழைத்து வந்ததும் நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் தாஇப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பதிலளித்தனர். நீங்கள் மதீனா வாசிகளாக இருந்திருந்தால் இறைத்தூதரின் மஸ்ஜிதாகிய இந்த ‘மஸ்ஜிதுல் நபவியில் ‘உயர் தொனியில் கதைத்த உங்கள் இருவரையும் தண்டிருத்திருப்பேன்’ என்றார்கள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜிதை கூட்டிப் பெருக்குவது, தூய்மையாக வைத்திருப்பது,மஸ்ஜிதுல் உள்ள குப்பை கூளங்களை வெளியேற்றுவது, நறுமணம் கமழச் செய்வது போன்றன சுவனத்திற்கு இட்டுச் செல்லு வழிகளாகும் எனவும் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா)
‘மஸ்ஜிதை தூய்மைப்படுத்தி வைத்திருப்பது ஹுருல்ஈன்களுக்குரிய மஹர் ஆகும் என்றுமட நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.’
(ஆதாரம்: தபரானி)
இஸ்லாத்தின் அடையாளச் சின்னமும், முஸ்லிம்களின் மத்திய தலமுமாகிய மஸ்ஜிதை அழகாகவும், தூய்மையாகவும், நேர்த்தியாகவும் வைத்திருப்பதற்கும் அதனை மணம் கமழச் செய்வதற்கும் பங்களிப்புச் செய்வது உயர்ந்த நற் செயலாகும்.
‘ஒரு முஸ்லிம் மஸ்ஜிதில் தொழுது விட்டு அடுத்த நேர தொழுகைக்காக அங்கு காத்திருந்தால் அவர் அங்கிருந்து திரும்பிச் செல்லும் வரை மலக்குகள் ‘இறைவா இந்த மனிதனது பாவங்களை மன்னிப்பாயாக. அவர் மீது அருள் புரிவாயாக ‘ என பிரார்த்திப்பார்கள் எனவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
ஆகவே மஸ்ஜித்துக்குரிய ஒழுங்குகளைப் பேணுவோம். அவற்றின் கண்ணியத்தை மேலோங்கச் செய்வதற்காக ஒன்றுபட்டு உழைப்போம்.
மௌலவி
எம்.யூ.எம். வாலிஹ்…
(அல் அஸ்ஹரி), வெலிகம