Monday, November 4, 2024
Home » மனிதத்தை புனிதத்தால் வென்ற அனைத்துப் புனிதர்கள் திருவிழா

மனிதத்தை புனிதத்தால் வென்ற அனைத்துப் புனிதர்கள் திருவிழா

by damith
October 29, 2024 6:00 am 0 comment

புனிதர்கள் வரலாற்றில் சிறந்தவர்கள். நம்மைப் போன்று மண்ணில் வாழ்ந்து விண்ணைச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள். அவர்களின் உறவை நாம் நாடுகிறோம். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் திகதியில் சகல புனிதர்களின் விழாவைக் கொண்டாடுகிறோம்.

வானதூதர்களை சற்றுப்பார்த்தால் அவர்கள் ஒன்பது வகையினர் அவரவர் பணிகள், தனித்தன்மை, பொறுப்பு, கடமை வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்களை “நவ விலாச வானதூதர்கள்” என அழைக்கிறோம்.

பத்தாவது நிலையில் உள்ளவர்கள் தான் புனிதர்கள் இவர்கள் நம் காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதர்களின் உணர்வு, பயம், அச்சம், நோய்களை உணர்ந்தவர்கள். நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடுபவர்கள்.

மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை இன்பங்களாக ஏற்று உலக மக்களின் நலனுக்காகவும் அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள்.

இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகின்ற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். அந்த வகையில் இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய அழைக்கிறது. அதற்கு இரண்டு யோசனைகளையும் வழங்குகிறது.

புனிதர்கள் நம்மைப் போல காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டவர்கள். அவர்கள் எல்லாருக்கும் ஒரு தொடக்கம் ஒரு முடிவு இருக்கின்றது. அவர்களுக்கென்று உடல் இருக்கின்றது. உறவுகள் உள்ளன. ஊர் இருக்கின்றது. இவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்வில், அந்த வாழ்வுச் சூழலில் இவர்கள் உன்னதமான மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கின்றார்கள். இவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்.

புனிதர்கள் யாரும் தமது வாழ்வுப்பாதையில் திரும்பிப் பார்க்கவில்லை. வாழ்வில் அவர்கள் எடுத்த முடிவிலிருந்து திரும்பிச் செல்லவில்லை. எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும், இடர்கள் வந்தாலும் அவர்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். மனிதத்தை புனிதத்தால் வென்றனர். அவர்கள் வெற்றி கண்டனர். அவர்கள் வாழ்வு இப்போது நமக்கு வரலாறானது. சாதாரண வாழ்வு மிகப்பெரிய வரலாறாக உருவெடுத்திருக்கிறது.

இந்த உலகத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்தார். மனிதா்கள் அவர்களிலிருந்து புனிதர்கள் என்கிற புதியவர்களைப் படைத்தார்கள். யார் இந்த புனிதர்கள்? அதைத்தான் வேதாகம நற்செய்தி நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ”வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்” என்று, திருவெளிப்பாடு புத்தகம் அவர்களை அறிமுகப்படுத்துகிறது.

இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்கிற கேள்விக்கு, ”இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்” என்று பதில் தரப்படுகிறது.

மனிதர்கள் அனைவருமே, கடவுள் தந்த வாழ்க்கை தங்களுக்கானது என்கிற குறுகிய நோக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில், ஒரு சிலர் மட்டும், கடவுள் கொடுத்திருக்கின்ற அந்த வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். எதற்காக கடவுள், மனிதர்களைப் படைத்தாரோ, அதற்காக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அந்த வாழ்க்கையை வாழ்வது அவ்வளவு எளிதானல்ல, என்பதையும் புரிந்து கொண்டார்கள். ஆனாலும், தங்கள் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை. அதனை வாழ்ந்து காட்டுகிறார்கள். அதன்பொருட்டு பல்வேறு துன்பங்களைச் சந்திக்கின்றார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவர்கள் புலம்பிக்கொண்டிருக்கவில்லை. இறுதிவரை சிறப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களைத்தான் திருச்சபை புனிதர்கள் என்று அறிவிக்கின்றது.

மனிதர்கள் ஒவ்வொருவருமே புனித வாழ்வு வாழ வேண்டும் என்பது தான் இறைவனின் விருப்பமாக இருக்கின்றது. அந்த வாழ்வை, பலர் நமக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி நாமும் இந்த மனித வாழ்வின் உண்மையான இலக்கை அடைவதற்கு முயற்சிப்போம்.

அருட்பணி. ஜெ. தோமஸ் ரோஜர்​

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x