இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பழக்கத்துடன் இரண்டறக் கலந்த ஒன்றாக விளங்குகிறது தேங்காய். தேங்காயானது உணவுக்கு துருவலாகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு இனிப்புப் பண்டங்களைத் தயாரிக்கவும் பிஸ்கட், கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும் பெரிதும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது தேங்காய்.
தேங்காயானது நேற்று இன்று மக்களின் உணவுப் பழக்கத்துடன் இணைந்த ஒன்றல்ல. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மக்களின் உணவுடன் இணைந்த ஒன்றாக விளங்குகிறது. இவ்வாறு மக்களின் உணவுப் பழக்கத்தில் தேங்காய் பிரதான இடத்தைப் பிடித்துள்ள போதிலும், உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காயே இந்நாட்டு மக்களின் பாவனைக்கு போதுமானது. வருடமொன்றுக்கு 2500 மில்லியன் முதல் 3000 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவில் தேங்காய் அறுவடை செய்யப்படுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அறுவடை செய்யப்படும் தேங்காயில் பெரும்பகுதி மக்களின் அன்றாட நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிடத்தக்களவு தேங்காய், தேங்காய் எண்ணெய்க்காகப் பயன்படுத்தப்படுவதோடு, சிறிதளவு தேங்காய் ஏற்றுமதியும் செய்யப்படுறது.
இந்நாட்டின் தேங்காய்க்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது. இந்நாட்டு தேங்காயைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் கேக் வகைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அதிக கேள்வி மிக்கதாகும். இந்தக் கேள்வியைச் சரியாகப் பயன்படுத்தினால் நாடு வருடா வருடம் குறிப்பிடத்தக்களவு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும். எனவே தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது மக்களின் அன்றாட தேங்காய் பாவனைக்கு பாதிப்போ தட்டுப்பாடோ ஏற்படாத வகையில் இந்நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இதன் பொருட்டு திட்டமிட்ட அடிப்படையில் வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறான சூழலில் சமீப தினங்களாக நாட்டில், குறிப்பாக தலைநகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தேங்காயின் விலை பெரிதும் அதிகரித்து காணப்படுவதாகவும் விமர்சங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தென்னந்தோட்டங்களில் இருந்து தேங்காய் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு நியாய விலையில் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. ஆனாலும் தேங்காய்க்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து பல்வேறு மட்டங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா குறிப்பிடுகையில், “நாட்டில் தேங்காய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் பல்தேசிய கம்பனிகளும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஒரிரு ஊழல்மிக்க அதிகாரிகளும்தான். அவர்கள் நாட்டின் தேங்காய்களை சேர்த்து தேங்காய்ப்பாலாகவும், தேங்காய் பால்மாவாகவும் ஏற்றுமதி செய்கின்றனர். அதன் விளைவாகவே இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நாட்டு தேங்காயில் 70 சதவீதமானவை இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களில் ஒன்று தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கப் பெற்றாலும் உள்நாட்டு பாவனையாளர்களைப் பாதிக்காத வகையில் இந்நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியம்.
அதேநேரம் தேங்காய் என்பது எடுத்த எடுப்பில் குரும்பையாகி காயாகி விடக்கூடிய ஒன்றல்ல. ஒரு குரும்பை உருவாகி முதிர்ச்சியடைந்த தேங்காயாக கிடைக்கப் பெறுவதற்கு ஏழு எட்டு மாதங்கள் செல்லும் என்பதையும் மறந்து விடலாகாது.
அத்தோடு தேங்காயை வழங்கக்கூடிய தென்னை மரமொன்றின் ஆயுட்காலம் 90 முதல் 110 வருடங்களாகுமென தெங்கு ஆராய்ச்சி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் தெங்கு பயிர்ச்செய்கையை விஸ்தரிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக தென்னந்தோட்டங்களை துண்டாடி காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கை பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது. அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தப்பட்டது. அதன் ஊடாக தேங்காய்ப் பற்றாக்குறை குறித்த அவதானம் மக்களிடம் இருந்து நீங்கிவிடும். இதுதான் வழக்கமானது.
ஆனால் தேங்காய்க்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணம் குறித்து உரிய முறையில் கவனம் செலுத்தினால் அதற்கு இவ்வாறு பற்றாக்குறை ஏற்படுவதை எப்போதோ தடுத்திருக்கலாம். குறிப்பாக தெங்கு செய்கையை விஸ்தரித்தல், புதிய நடுகை மேற்கொள்ளல், தென்னங்தோட்டங்களை துண்டாடி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தல், தற்போதுள்ள தென்னைகளை உரிய பசளை இட்டு பராமரித்தல் போன்றவாறான நடவடிக்கைகள் இதற்கு பெரிதும் உதவ முடியும். அப்போது நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட வழி இருக்காது.