ஐஸ், போதைப்பொருளை தனது பயணப் பொதியில் சிறிய அரிசி மூடைக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டுவந்தவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இவற்றின் பெறுமதி ஏழு கோடியே 03 இலட்சத்து 64,000 ரூபா என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இவரை அழைத்துச்செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து (26) வந்த ஏ.கே.47 இலக்க விமானத்தில் இவர் வந்திறங்கினார்.
கைதான இந்நபர்,51 வயதுடைய வர்த்தகரான கொத்தடுவ பிரதேசத்தில் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருபவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது பயணப்பொதியில் சிறிய ரக அரிசிப் பைக்குள், 05 கிலோ 026 கிராம் எடை கொண்ட இந்த ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
போதைப்பொருளுடன் வந்த நபரை விமான நிலையத்திலிருந்து உடனடியாக அழைத்து செல்வதற்கு, விமான நிலையத்துக்கு வந்திருந்த வேபொட பகுதியைச் சேர்ந்த 36 வயது வாகன சாரதியும், அவருக்கு உதவியாளராக வந்த பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 33 வயது யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவர்,இவர்களின் வாகனம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் என்பவற்றை நேற்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.