முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் மனைவிக்குச் சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத காரொன்று (26) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே, இந்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். லொஹான் ரத்வத்தயின் மனைவி ஷஷி பிரபாவுக்கு சொந்தமான மிரிஹான – எம்புல்தெனிய மண்டப வீதியிலுள்ள வீடொன்றில், இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் இருப்பதாக பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுடன், வீட்டுக்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வீட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் மனைவியின் தாயார், வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர், காரை மூன்று வாரங்களுக்கு முன்பு கராஜுக்கு கொண்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாவிகள் இல்லாத சொகுசு கார் (26) மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரச பரிசோதகர் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும், அதன் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.