Home » மனித நேயத்தின் முக்கியத்துவம்

மனித நேயத்தின் முக்கியத்துவம்

by Gayan Abeykoon
October 25, 2024 11:34 am 0 comment

இறைவனின் படைப்பில் மனிதப்படைப்பு மிகவும் வித்தியாசமானது. எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு முகம் தான் உள்ளது. அது என்றும் மாறா முகம். ஆனால் மனிதன் பல முகங்களைக் காட்டக்கூடியவனாக உள்ளான். குறிப்பாக வீட்டில் ஒரு முகம், வேலை செய்யும் இடத்தில் ஒரு முகம், உறவினர்களிடத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், ஏழைகளிடத்தில் ஒரு முகம், பணக்காரர்களிடத்தில் ஒரு முகம்… என ஒரே முகத்தை வெவ்வேறு வடிவங்களில் அன்றாடம் காட்டக்கூடியவனாக இருக்கிறான்.

ஆனால் மனிதனின் உண்மையான முகம் அன்பான முகம் ஆகும். ‘நண்பனை புன்முறுவலுடன் சந்திப்பது(ம் கூட) தர்மமாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நபிமொழி)

இன்று எங்கும் மனிதர்களை காணக்கூடியதாக இருந்தாலும் அவர்களிடம் இருக்கவேண்டிய அன்பும், அரவணைப்பும், பற்றும், பாசமும், நேசமும், வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. மனிதநேயத்திற்கு முற்றிலும் மாற்றமான செயல்கள் எங்கும் வியாபித்துள்ளன.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘எவர், சிலரிடம் ஒரு முகத்துடனும், வேறு சிலரிடம் மற்றொரு முகம் கொண்டவராகவும் நடந்து கொள்கிறாரோ, அவர்தான் மறுமையில் கடும் வேதனைக்கு உரியவர், எவர் இம்மையில் இருமுகத்துடன் இருந்தாரோ அவர் மறுமையில் நெருப்பினால் ஆன இரு நாக்குகளுடன் இருப்பார்’ என்று கூறினார்கள்.

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம், தாரமி)

ஆளுக்கு தகுந்தாற்போல் வேஷம் போடுவதும், நடிப்பதும், கள்ளத்தனம் காட்டுவதும் கூடாது. உண்மையான முகம் தான் என்றைக்கும் வெற்றிபெறும். மனிதர்களை வேண்டுமானால் எளிதில் ஏமாற்றி விடலாம், ஆனால் நம்மைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்வை  ஏமாற்ற முடியாது.

இது தொடர்பில் அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது.

‘கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்’.                        ( 2:115)

‘மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்’.             ( 55:27)

இறைவன் எத்தகைய முகம் உள்ளவன் என்பதை நாம் அறிவதற்கு இந்த இரண்டு வசனங்களும் போதுமானது. எனவே அவனது திருமுகத்தை விட்டும். நாம் நம் முகத்தை வேறொரு திசைப்பக்கம் திருப்பிக்கொள்ள முடியாது என்பதை இவ்வசனங்கள் உணர்த்துகின்றன.

நாம் இறைவனின் திருமுகத்தை முன்னோக்குகின்ற அதே வேளையில் மனிதர்களின் முகத்தையும் நாம் முன்னோக்க மறந்து விடக்கூடாது என்பதையும் அல் குர்ஆனின் பின்வரும் வசனம் மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

‘புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல், இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஸக்காத் கொடுத்து வருதல் (இவைகள் தான் புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள், இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)’.

(2:177)

இறைபக்தியுள்ளோர்களின் முகம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியுள்ளது.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். ‘நற்குணங்களால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்கள் தான் இறை நம்பிக்கையில் பரிபூரணமானவர்கள்’. (நபிமொழி)

பணத்தை எப்படியும் நாம் சம்பாதித்து விடலாம், ஆனால் நம் முகம் நற்குணத்தால் பிரகாசிக்க வேண்டும் என்றால் அதற்கு கொஞ்ச காலம் பயிற்சியும், நல்ல முயற்சியும் எடுக்க வேண்டும்.

‘யாரைப்பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களுக்கு அவ்வப்போது சொல்லி வந்தார்கள், என்று அவர்களது வாழ்வியல் வரலாறு கூறுகிறது. நபிகளார் தம் முகத்தை, தன் சமூகத்தை எப்படி வெளிக்காட்ட வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதேநேரம் அல் குர்ஆன், ‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்’  என்றுள்ளது.        (31:18)

மேலும் அல் குர்ஆன் குறிப்பிடும் போது, ‘எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்’ (5:45) எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இன்று உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் நயவஞ்சக முகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகையவர்களைத் தான் நபி (ஸல்) அவர்கள், ‘பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்’ இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என்று கூறினார்கள். (நபிமொழி)

ஆகவே எல்லோருடனும் இன்முகமாய் இருப்போம். மனித நேயத்தை வளர்ப்போம்.

அப்துல்லாஹ்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT