இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
37 வயதான வோர்னர் ஓய்வு பெற்றது தொடக்கம் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் உஸ்மான் கவாஜாவுடன் ஸ்டீவ் ஸ்மித் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டிருந்தார். எனினும் எதிர்வரும் நவம்பரில் ஆரம்பமாகும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்மித் நான்காவது வரிசைக்குத் திரும்பவுள்ளார்.
சகலதுறை வீரர் கமரோன் கிரீன் உபாதை காரணமாக அணியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் கவாஜாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட மற்றொரு வீரரை அவுஸ்திரேலிய அணி தேடி வருகிறது.
இந்நிலையில் ‘கோட் ஸ்போட்ஸ்’ செய்தி நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவித்த வோர்னர், ‘நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன், தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பது மாத்திரமே உள்ளது. (அணிக்கு திரும்புவதில்) நான் உண்மையில் தீவிரமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பயிற்சியாளர் அன்ட்ரூ மக்டொனால்ட் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி ஆகியோருக்கு ஓய்வில் இருந்து திரும்புவது குறித்து செய்தி அனுப்பியதாகவும் வோர்னர் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்டொனால்ட், ‘ஓய்வு பெற்றுவிட்டீர்கள்’ என்று பதிலளித்ததாக வோர்னர் குறிப்பிட்டார்.
கவாஜாவுடன் ஆரம்ப வீரராக செயற்படுவதற்கு கமரோன் பான்க்ரொப்ட், மார்கஸ் ஹரிஸ், சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் மத்தியூ ரென்ஷோ ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் வோர்னரை மீண்டும் அழைப்பதில் அவுஸ்ரேலிய அணி ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.
எதிர்வரும் நவம்பரில் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஜனவரி வரை போடர் – கவாஸ்கர் கிண்ணத்திற்காக ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.