இங்கிலாந்தின் ‘தி ஹன்ட்ரட்’ லீக் கிரிக்கெட் தொடரில் ஆடும் அணிகளை வாங்குவதில் இந்திய பிரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிகள் ஆர்வம் காட்டியுள்ளன.
100 பந்துகளை மட்டுமே கொண்டு நடத்தப்படும் இந்தத் தொடர் அதிக பிரபலம் பெறாத நிலையிலேயே இதில் ஆடும் அணிகளில் முதலீடு செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு அணிகளின் 49 வீதமான பங்குகளை விற்பனை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் சபை முடிவு எடுத்துள்ளது.
முதற்கட்ட ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தரப்பில் ஏலத்திற்கான தொகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேநேரம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளது.
ஹன்ட்ரட் அணிகளின் 49 வீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், மீதமுள்ள 51 வீத பங்குகள் கவுண்டி அணிகளிடம் தான் இருக்கும். அவர்களும் இணைந்தே அணியை வழிநடத்துவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.