Home » அ.இ.ம.காங்கிரஸ் கட்சி சிரேஷ்ட உறுப்பினர் ‘மைக்’ கட்சியில் இணைவு

அ.இ.ம.காங்கிரஸ் கட்சி சிரேஷ்ட உறுப்பினர் ‘மைக்’ கட்சியில் இணைவு

by sachintha
October 24, 2024 8:34 am 0 comment

கட்சியின் தலைவருக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும் தெரிவிப்பு

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நீண்டகால கட்சி உறுப்பினரும் வை.எம்.எம்.ஏ.யின் புத்தளம் மாவட்ட பணிப்பாளருமான முஜாஹித் நிசார் செவ்வாய்க்கிழமை (22) ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் இணைந்து கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஆப்தீன் எஹியாவின் வெற்றிக்காக முன்னின்று செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற வேட்பாளருமான ஆப்தீன் எஹியாவின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (22) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட முஜாஹித் நிசார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது, தான் நீண்ட நாட்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் போராளியாக இருந்து புத்தளம் மாவட்டத்தில் கட்சிக்காக கடுமையாக உழைத்து வந்துள்ள போதிலும், இம்முறை பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் மயில் கட்சி சார்பில் புத்தளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள் தன்னை உதாசீனம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இளைஞர்களின் முன்னேற்ற செயற்பாடுகளுக்கும் தடையாக செயல்படுகின்ற காரணங்களால் அக்கட்சியை விட்டு வெளியேறியதாக தெரிவித்த அவர், கட்சியின் தலைமைக்கும் தனக்கும் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் நாட்டில் உள்ள தலைவர்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் மைக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க ஆகிய இரண்டு தலைவர்களையே ஊழலற்ற தலைவர் என தான் அடையாளம் கண்டதாகவும் அதன் நிமித்தமே தான் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இவ் ஊடக சந்திப்பில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா மற்றும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினருமான அலிகான் ஷெரீப், வேட்பாளர் முயீன் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT