இலங்கையிலுள்ள சகல வெளிநாட்டவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறுகம்பை பிரதேச பாதுகாப்பு தொடர்பில் நேற்று பல சர்வதேச நாடுகள் விடுத்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கையையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று மாலை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பதில் பொலிஸ் மாஅதிபர்;
நாட்டுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பில் மிகுந்த கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கடந்த அக்டோபர் (07) இல் இது தொடர்பில் எமக்கு புலனாய்வு பிரிவு தகவல்கள் கிடைத்தன.
அத்துடன் சில வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
அந்த ஆலோசனைகளுக்கிணங்க வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு, பிரதேசங்களின் பாதுகாப்பு,அவர்கள் சமய நடவடிக்கைகளில் பங்கேற்கும் இடங்கள் ஆகியவற்றில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதற்கிணங்க நேற்று முன்தினம் (22) முதல் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் பாதுகாப்புச் சபை கூடியது. பாதுகாப்புத் துறை பிரதானிகள் மற்றும் முப்படைத் தளபதிகளும் இணைந்து இங்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். இதன் போது கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டவர்களது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து தூதுவரால யங்களுக்கும் நாம் அறிவித்துள்ளோம்.
அதேவேளை, தேசிய ரீதியில் உள்நாட்டவர்களை இலக்கு வைத்து இதுவரை எந்த ஒரு அச்சுறுத்தலும் கண்காணிக்கப்படவில்லை.எனினும் எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தல், வித்தியாசமான நடவடிக்கைகள், தகவல்கள், நபர்கள், தாக்குதல்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு நாம் பொத மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
24 மணித்தியாலங்களிலும் 1997 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அதனைத் தெரிவிக்க முடியும்.
தற்போது போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் சந்தேக நபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் இல்லை.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாட்டில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. எனினும் சர்வதேச பிஜைகள் தொடர்பில் சில சிக்கல்கள் காணப்பட்டன.
உலகில் ஏனைய நாடுகளிலும் இது பொதுவானது. எவ்வாறாயினும் நாம் அவ்வாறு எதுவும் இடம்பெறாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
விமான நிலையம் மற்றும் விமான நிலையத்தின் உட் பிரவேசிக்கும், வெளிச்செல்லும் பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலா பகுதிகளிலிருந்து இஸ்ரேலியர்களை வெளியேற அறிவுறுத்தல்
லோரன்ஸ் செல்வநாயகம்