நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்ற சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடமாடும் லொறிகள் மூலம் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யும் திட்டமொன்றை தெங்குப் பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு விற்கப்படும் தேங்காய்களை கொள்வனவு செய்தவற்காகவே மக்கள் இவ்வாறு வரிசையில் நிற்கின்றமையே இதற்கு காரணமாகும்.
நிலவும் தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக இன்று (23) அதன் முதற் கட்டமாக கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவெல மாநகர சபை பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தேங்காய் ஒன்றின் வலை ரூ.100 – 120 வரை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கொழும்பு எல்லைக்குட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும், கிருலப்பனை பொதுச் சந்தைக்கு அருகாமையிலும், நிதி அமைச்சின் வளாகத்திலும் இவ்வாறு நடமாடும் லொறிகள் மூலம் தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அத்தோடு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்குட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும், நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு அருகாமையிலும் நடமாடும் தேங்காய் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடுவெல மற்றும் பத்தரமுல்லை எல்லைகளை உள்ளடக்கிய, செத்சிறிபாய அரச அலுவலக வளாகம் மற்றும் டென்சில் கொப்பேகடுவ தெங்குப் பயிர்ச்செய்கை சபைக்கு அருகில் வாடிக்கையாளர்களுக்கு தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக முக்கிய நகரங்களில், சலுகை விலையில் தேங்காய் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.
இவ்வேலைத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.