மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் யுத்த பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலைமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அதேநேரம் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி வழி முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. இருந்த போதிலும் ஒரு வருடம் கடந்தும் கூட அமைதி நிலை ஏற்பட்டதாக இல்லை. மாறாக போர்பதற்றம் தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலாளர்களாகப் பணி புரியும் தங்கள் பிரஜைகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு நாடும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. உலகின் பல நாடுகளையும் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் இப்பிராந்திய நாடுகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இலங்கையும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் தம் குடிமக்களின் நலன்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தி வருகின்றது. இதன் நிமித்தம் அந்தந்த நாடுகளில் பணியாற்றும் இலங்கைக்கான தூதுவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வெளிவிவகார அமைச்சு வழங்கி இருக்கிறது.
அந்த அடிப்படையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், ‘மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர் தாங்கள் பணிபுரியும் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படத் தவறலாகாது என்று குறிப்பிட்டுள்ளதோடு மத்திய கிழக்கில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் தமக்கு நெருக்கிய உறவினர்களுக்கு ஏதாவது அவசர நிலை ஏற்பட்டிருப்பின் அது தொடர்பான தகவல்களுக்கு வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. இதன் நிமித்தம் தொலைபேசி இலக்கங்களையும் வெளிவிவகார அமைச்சு வழங்கி இருக்கிறது.
உண்மையில் இது காலத்திற்கு அவசியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
ஏனெனில் மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள நாடுகளில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் தொழில் புரிகின்றனர். அவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றுபவர்களாக உள்ளனர். குறிப்பாக இலங்கைக்கு அந்நியச் செலாவணி கிடைக்கப்பெறும் முக்கிய மூலங்களில் ஒன்றாக வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளோரும் விளங்குகின்றனர்.
அதன் காரணத்தினால் இலங்கை பிரஜைகள் என்ற வகையிலும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை நல்குபவர்கள் என்ற அடிப்படையிலும் மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையரின் நலன்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும்.
ஏனெனில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி பலஸ்தீன், காஸாவின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடாத்தியதோடு 200 க்கும் மேற்பட்டவர்களைப் பணயக் கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.
இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும் பணயக் கைதிகளை மீட்டெடுப்பதற்காகவும் எனக்கூறி காஸா மீது போரை இஸ்ரேல் ஆரம்பித்தது. ஆனால் ஒரு வருடம் கடந்தும் கூட போர் முடிவுற்றதாக இல்லை. காஸா மீதான யுத்தம் காஸாவுக்கு வெளியே ஒரு புறம் லெபனானுக்கு வியாபித்துள்ளது. சிரியா, யெமன் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகினறன.
இவை இவ்வாறிருக்க, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எந்த வேளையிலும் போர் உருவாகக்கூடிய பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் யஹ்யா சினவார் நேற்று முன்தினம் (17.10.2024) இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் மத்திய கிழக்கில் பல நாடுகளின் பிரஜைகளைப் போன்று இலங்கையரும் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறனர். குறிப்பாக தற்போது யுத்தம் இடம்பெறும் இஸ்ரேலில் 12 ஆயிரம் பேரும், லெபனானில் 7 ஆயிரத்து 500 பேரும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சிலர் யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் பணியாற்றுவதாகவும் அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் போர் இடம்பெறும் நாடுகளுக்கு அருகிலுள்ள ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இலங்கையர் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருவதையும் மறந்து விடலாகாது.
அதன் காரணத்தினால் மத்திய கிழக்குப் பிராந்திய நாடுகளில் பணியாற்றும் இலங்கையரின் நலன்கள் குறித்து விஷேட கவனம் செலுத்த வேண்டியது தவிர்க்க முடியாத காரியமாக உள்ளது. அந்த வகையில் இது தொடர்பில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் வரவேற்று பாராட்டுகின்றனர்.
ஆனாலும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர் வெளிவிவகார அமைச்சு வழங்கும் அறிவுரை, ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். இவ்விடயத்தில் கவனயீனமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்ளலாகாது.