– பெறுமதி ரூ. 25 கோடி; தேயிலை பொதியினுள் மீட்பு
நேற்றிரவு (18) 11.30 மணியளவில் சட்டவிரோத போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலேசியன் எயபர்லைன்ஸுக்குச் சொந்தமான MH 179 விமானத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்காவுக்கு வந்த குறித்த பயணியிடம் தேயிலைத் தூள் அடங்கிய பொதிகளில் 10.197 கிலோகிராம் ஐஸ் வகை போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பயணி, சுங்கத்திற்கு அறிவிக்க எதனையும் அறிவிக்காமல் வெளியேற்றக் கூடிய கிறீன் வாயில் ஊடாக வெளியேற முயற்சித்துள்ளதாக, சுங்கத் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகமும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
குறித்த போதைப்பொருளின் பெறுமதி ரூ. 250 மில்லியன் (ரூ. 25 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் 35 வயதான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருளுடன் சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.