குசல் மெண்டிஸ், குசல் பெரேராவின் அபார ஆட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதல் முறை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி20 தொடர் ஒன்றை 2–1 என கைப்பற்றியது.
தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆரம்ப வீரர்களான பத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் 32 பந்துகளில் 60 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.
பத்தும் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் குசல் ஜனித் பெரேராவுடன் இணைந்த குசல் மெண்டிஸ் அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். இதன்போது அதிரடி ஆட்டத்தைக் காட்டிய குசல் மெண்டிஸ் 50 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களைப் பெற்றதோடு மறுபுறம் குசல் பெரேரா 36 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களைப் பெற்றார்.
‘அணி இந்த இலக்கை எட்டியது மகிழ்ச்சியானது. இந்த ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுவது இலகுவானதல்ல, என்றாலும் இந்தச் சூழல் எமக்கு பழக்கப்பட்டது’ என்று ஆட்ட நாயகன் விருதை வென்ற குசல் மெண்டிஸ் போட்டியின் பின்னர் தெரிவித்தார்.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, மத்திய வரிசையில் அணித் தலைவர் ரோவ்மன் பவல் பெற்ற 27 பந்துகளில் 37 ஓட்டங்கள் மற்றும் குடகேஷ் மோட்டி பெற்ற 15 பந்துகளில் 32 ஓட்டங்களின் மூலம் 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற முடிந்தது.
அடுத்து இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளைமறுதினம் (20) பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.