Home » யானைக் கூட்டத்துடன் மோதிய எரிபொருள் ரயில்; 2 யானைகள் பலி

யானைக் கூட்டத்துடன் மோதிய எரிபொருள் ரயில்; 2 யானைகள் பலி

- கொழும்பு - மட்டக்களப்பு இடையில் ரயில் சேவைகள் இரத்து

by Prashahini
October 18, 2024 10:06 am 0 comment

– பெட்டிகள் தடம்புரண்டு குடைசாய்ந்து போக்குவரத்து ஸ்தம்பிதம்

இன்று (18) காலை கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத பாதையில் மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட பகுதிக்கு இடையில் யானைக் கூட்டத்துடன் எரிபொருள் புகையிரதம் மோதி தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

யானைக் கூட்டம் புகையிரதத்தில் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மற்றுமொரு யானை படுகாயமடைந்துள்ளதாக மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, குறித்த சீரமைப்பு பணி நிறைவடையும் வரை இன்றையதினம் (18) கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு இடையிலான புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த மீனகயா புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மேலும், கல் ஓயாவிலிருந்து திருகோணமலை வரை இயக்கப்படவிருந்த இரண்டு ரயில்களும், மஹவயில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு சரக்கு புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலன்னாவை எண்ணெய்க் களஞ்சியத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இந்த எரிபொருள் புகையிரதத்தின் எஞ்சின், கட்டுப்பாட்டு அறை மற்றும் நான்கு எண்ணெய்த் தாங்கிகள் இச்சம்பவத்தில் தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரதத்தில் 7 டீசல் தாங்கிகளும், 4 பெற்றோல் தாங்கிகளும் இருந்துள்ளதோடு, தாங்கிகளில் 11,000 கலன் எரிபொருள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இரண்டு பெற்றோல் தாங்கிகள் கவிழ்ந்ததில் எரிபொருள் கசிவு காணப்படுவதாக, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த புகையிரதத்தில் சாரதி உட்பட 4 ஊழியர்கள் பயணித்ததாகவும் அவர்களில் எவருக்கும் காயமோ அல்லது எவ்வித ஆபத்துகளுமோ ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT