பாதுகாப்பு கைத்தொழில் துறை ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்தியாவும் ஜேர்மனியும் கவனம் செலுத்தியுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் பொரிஸ் பிஸ்டோரியஸுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய சமயம் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இம்மாத இறுதியில் புதுடில்லிக்கு விஜயம் செய்ய உள்ளனர். அதன் நிமித்தம் இடம்பெற்றுள்ள இக்கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு கைத்தொழில் துறை ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் வான் மற்றும் கடல் சார் பயிற்சி அடங்கலாகப் பாதுகாப்பு ஆதரவு குறித்தும் இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
அதேநேரம் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திலுள்ள பல கருத்திட்டங்கள் குறித்தும் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவுக்கான ஜேர்மனி தூதுவர் தூதர் பிலிப் அக்கர்மேன் தெரிவித்துள்ளார்.