Monday, November 4, 2024
Home » இலங்கையிலிருந்து விடுதலையான 51 மீனவர்களும் தமிழகம் திரும்பினர்

இலங்கையிலிருந்து விடுதலையான 51 மீனவர்களும் தமிழகம் திரும்பினர்

by mahesh
October 16, 2024 9:45 am 0 comment

இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 51 மீனவர்கள் நேற்றுமுன்தினம் இரவு கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னை விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, இராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 51 மீனவர்கள் கடந்த மாதம் 25 ஆம் திகதி விசைப் படகுகள் மூலம் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு இலங்கைக் கடற்படையின் ரோந்து கப்பல், தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை சுற்றி வளைத்தது.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 51 பேரையும் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் விசைப் படகுகள், மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் தமிழக மீனவர்கள் 51 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அம்மீனவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதினார்.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

விடுதலை செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்களுக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். பின்னர் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதுதொடர்பாக அனைத்து மீனவர்களுக்கும் அவசர சான்றிதழ்களை இந்திய தூதரக அதிகாரிகள் வழங்கினர். மேலும், 51 தமிழக மீனவர்களுக்கும் விமான டிக்கெட்டுகளுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர்.

இந்நிலையில், கொழும்பில் இருந்து புறப்படட எயார்இந்தியா பயணிகள் விமானத்தில் 51 தமிழக மீனவர்களும் நேற்றுமுன்தினம் இரவு சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்களை அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் ஏற்றி, அவரவரின் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x