நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் சில நோய்கள் தலைதூக்கக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை மருத்துவ நிபுணர்களும் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளனர்
குறிப்பாக குளிர் மற்றும் மழைக் காலநிலையுடன் சேர்த்து நாட்டில் சில நோய்கள் தலைதூக்குவது வழமையாகும். அவற்றில் குழந்தைகள் மத்தியில் பருவ கால ஆஸ்துமா, இன்புளுவென்ஸா உள்ளிட்ட சுவாசத் தொகுதி நோய்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்நோய்களுக்கு வைரஸ் நுண்ணுயிர்கள் தான் பெரும்பாலும் மூல காரணமாக அமைகின்றன. என்றாலும் ஒரிரு நோய்களுக்கு பக்றீரியா நுண்ணுயிரும் காரணமாக விளங்குகின்றன.
இவ்விதமான நோய்களால் மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைத்தல், இருமல் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் ஏற்படும் ஆஸ்துமா காரணமாக அவர்கள் மத்தியில் மூச்செடுப்பதில் சிரமும் ஏற்டலாம்.
அதேநேரம் இச்சீரற்ற காலநிலை காலத்தில் சுகாதார முறையில் பேணப்படாத பாதுகாப்பற்ற உணவு வகைளை உண்ணக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும். அதாவது சில கீரை வகைகள் வெள்ள நீரில் மூழ்கியவையாக இருக்கலாம். அவற்றை உரிய முறையில் கழுவி தொற்று நீக்கம் செய்யாது உண்ணக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். அவை வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கலாம். அதனால் தான் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவும் போது கீரை வகைளையும் மரக்கறிகளையும் தொற்று நீக்கம் செய்யாதது பச்சையாக உண்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது. அத்தோடு இக்காலப்பகுதியில் கொதித்தாறிய நீரைப் பருகவும் தவறக்கூடாது. இருந்த போதிலும் இது தொடர்பில் பெரும்பாலானவர்கள் கவனம் செலுத்துவதாக இல்லை.
இதன் விளைவாக குழந்தைகள் மத்தியில் வயிற்றோட்டம், வயிற்றுக் கோளாறு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் மிக அதிகமாகும்.
இவை இவ்வாறிருக்க, சீரற்ற காலநிலையுடன் சேர்த்து இலையான் பெருக்கமும் அதிகரிக்க முடியும். அவை உணவு மற்றும் குடிநீர்ப் பாத்திரங்களில் மொய்ப்பதன் விளைவாக வயிற்றுக் கோளாறு போன்ற உபாதைகளுக்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தலும் நிலவே செய்கின்றது. அதன் காரணத்தினால் தான் உணவு வகைகளை இலையான் மொய்க்காத வகையில் பாதுகாப்பாக மூடிப் பேணிக் கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.
இதேவேளை வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் மண் காய்ச்சல் பரவக்கூடிய அச்சுறுத்தலும் காணப்படவே செய்கிறது. அசுத்தமான மண், காற்று அல்லது நீரில் தொடர்பு மூலம் இக்காய்ச்சலைப் பரப்பும் மெலியோடோசிஸ் பக்றீரியா பரவலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
தற்போது குருநாகல் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலயின் சிறுவர் நோயியல் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
மழைக்காலநிலையுடன் சேர்த்து ஹெப்படைடிஸ் என்கிற மஞ்சள் காய்ச்சல் பரவக்கூடிய அபாயமும் நிலவே செய்கிறது.
இவை இவ்வாறிருக்க, எலிக்காய்ச்சல் தலைதூக்கவும் மழையுடன் கூடிய காலநிலை பெரிதும் பங்களிக்க முடியும். அத்தோடு மழையுடன் சேர்த்து டெங்கு வைரஸ் காய்ச்சல் தலைதூக்குவதும் அண்மைக் காலமாக வழக்கமாகியுள்ளது.
ஏனெனில் டெங்கு வைரஸ் சுயமாகப் பரவக்கூடிய பண்பைக் கொண்டிராத போதிலும் காவிப்பரப்பும் பணியை நுளம்புகளில் காணப்படும் ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகள் மேற்கொள்கின்றன. இந்நுளம்புகளின் பெருக்கத்திற்கு மழையுடன் கூடிய காலநிலை பெரிதும் பங்களிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது இந்த வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகள் மழை நீர் உள்ளிட்ட தெளிந்த நீரில் பெருகும் பண்பையே கொண்டிருக்கின்றன.
என்றாலும் இந்நுளம்புகளின் பெருக்கத்திற்கு பெருமளவில் தெளிந்த நீர் தேவைப்படாது. வீட்டிலும் சுற்றுச்சூழலிலும் கைவிடப்பட்டுள்ள சிரட்டை, டயர், பொலித்தீன், யோகட் கப்புகள் உள்ளிட்ட திண்மக் கழிவுப் பொருட்களில் சேரும் சிறிதளவு தெளிந்த நீரே அதற்கு போதுமானது. அதனால் தான் வீட்டிலும் சுற்றாடலிலும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்க முடியாதபடி சுற்றுச்சூழலை பேணிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு விதமான நோய்களுக்கு வித்திடக் கூடியதாகவே சீரற்ற காலநிலை விளங்குகிறது. அதன் காரணத்தினால் தான் மருத்துவர்கள் சீரற்ற காலநிலை நிலவும் சூழலில் அடிப்படை சுகாதாரத்தைப் பேணிக் கொள்வதிலும் நோய்க் கிருமிகள் பரவுவதற்கு துணை போவதைத் தவிர்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்குகின்றனர். அதனால் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அடிப்படை சுகாதார ஆலோசனைகளைப் பேணிக் கொள்ளும் போது இத்தகைய நோய்கள் எதுவும் தலைதூக்கவோ ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமையவோ இடமிருக்காது. இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும்.