எமது நாடு பண்டைய காலத்தில் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடாக இருந்தது. அன்றைய மன்னர்கள் விவசாயத்துக்கு முன்னுரிமையும் உதவிகளும் வழங்கினர். நாடெங்கும் நீர்ப்பாசனக் குளங்களை அன்றைய மன்னர்கள் அமைத்தனர். அன்றைய காலத்தில் அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட குளங்களின் மூலமே இன்றும் விவசாயிகள் நீர்ப்பாசனத்தைப் பெற்று வருகின்றனர். விவசாயத்துக்கு மாத்திரமன்றி, குடிநீர் விநியோகத்துக்கும் அக்குளங்களையே மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அன்றைய காலத்தில் சமூகத்தில் மிகவும் உயர்ந்த தொழிலாக நெற்செய்கையே போற்றப்பட்டது. மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் சமூகத்தில் கௌரவத்துக்கு உரியவர்களாக மதிக்கப்பட்டனர். அக்காலத்தில் இளம்பெண்களுக்கு மணமகன் தேடுகின்ற போது, நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளையே பெற்றோர் பெரிதும் விரும்பினர்.
நெற்செய்கைக்கு ஏற்றதான விளைநிலங்கள் அதிகம் இருந்தன. நீர்ப்பாசனத்துக்ெகன குளங்களும் அதிகம் இருந்தன. அக்குளங்கள் பராமரிக்கப்பட்டும் வந்தன. அக்காலத்தில் விவசாயத்துக்ெகன நீர்ப்பற்றாக்குறை இருந்ததில்லை. விவசாயிகளும் செல்வந்தர்களாகவே வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறான விவசாயப் பொருளாதாரம் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை உச்சத்தில் நிலவி வந்தது. அரசாங்க உத்தியோகத்துக்கு நிகரானதாக விவசாயமும் கருதப்பட்ட காலப்பகுதி அதுவாகும்.
1977 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பின்னரான பொருளாதாரக் கொள்கைகளால் எமது நாட்டின் விவசாயம் படிப்படியாக வீழ்ச்சி நிலைமைக்குச் சென்றது. திறந்த பொருளாதாரக் கொள்கை என்பதன் பேரில் வெளிநாடுகளில் இருந்து அரிசியையும் இறக்குமதி செய்கின்ற நிலைமைக்கு இலங்கை உள்ளானது.
பண்டைய அரசர்கள் காலத்தில் இலங்கையில் இருந்து தென்னிந்தியாவுக்கு அரிசி நிவாரணம் அனுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இலங்கை மன்னனுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு நிலவிய காலகட்டத்தில் அவ்வாறான சம்பவமொன்று நிகழ்ந்ததாக வரலாற்றுத் தகவலொன்று கூறுகின்றது.
தென்னிந்திய மன்னன் ஒருவனின் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவிய வேளையில், இலங்கை மன்னன் ஒருவன் பெருந்தொகை அரிசியை அம்மன்னனுக்கு நிவாரணமாக அனுப்பியதாக அந்தத் தகவல் கூறுகின்றது.
இந்தத் தகவலுக்குப் பின்னால் மற்றொரு செய்தியும் உள்ளதை இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. தென்னிந்திய மன்னனுக்கு பெருந்தொகை அரிசியை நிவாரணமாக அனுப்பி வைக்கும் அளவுக்கு, இலங்கையில் அரிசியில் தன்னிறைவு நிலவியுள்ளதென்பதே அத்தகவல் ஆகும்.
இன்றைய நிலைமை அவ்வாறானதாக இல்லை. திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் அரிசியும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஒருபுறமிருக்க, விவசாயத் தொழில் என்பது படிப்படியாக புறக்கணிப்புக்கு உள்ளாகத் தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகையில், உள்ளூர் அரிசி உற்பத்தி மீதான அக்கறை படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
அக்கால விவசாயிகளின் அடுத்தடுத்த தலைமுறையினர் நெற்செய்கையை முற்றாகவே கைவிடும் நிலைமை உருவானது. விவசாயம் என்பது அகௌரவத்துக்குரிய தொழிலென்று இளைஞர்கள் கருதும் நிலைமை ஏற்பட்டது. அன்றைய அரசாங்கங்கள் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டதனால், இளைஞர்களும் விவசாயம் மீது வெறுப்புக் கொள்ளத் தொடங்கினர்.
அரசாங்கத் தொழில் மீதான மோகம் அதிகரித்தது. விவசாயம் என்பது கடினமான தொழிலென்ற அபிப்பிராயம் சமூகத்தில் உருவாகியது. இலகுவான தொழில் புரிந்து வாழ்வதே மேலானதென்ற எண்ணம் இளவயதினர் மத்தியில் உருவாகத் தொடங்கியது.
இது ஒருபுறமிருக்க, நெற்செய்கை நிலங்கள் படிப்படியாக கபளீகரம் செய்யப்பட்டு குடிமனைப் பிரதேசங்களாக மாறத் தொடங்கின. நெற்செய்கை மீதான அக்கறை பெருமளவு இல்லாமலேயே போய் விட்டது. விவசாய நிலங்கள் வெறும் தரிசு நிலங்களாக மாறிப்போய் விட்டன.
விவசாயத்தின் மீதான புறக்கணிப்பு ஒருபுறமிருக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உரப்பாவனை நிறுத்தப்பட்டமை விவசாயத்தின் மீது மற்றொரு சிக்கலை ஏற்படுத்தியது. அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், உணவுப் பற்றாக்குறையும் உருவானது. விவசாயத்தை உதாசீனம் செய்த நாடாக இலங்கை மாறிப் போனது.
இத்தகைய நிலைமை இனிமேலும் தொடர்வதற்கு இடமளிக்கலாகாது. மனித இனம் நிலைத்திருப்பதற்கு உணவு உற்பத்தியே அத்தியாவசியமானதாகும். புறக்கணிக்கப்பட்ட விவசாயத்தை மீண்டும் முன்னைய நிலைமைக்குக் கொண்டு வருவது அவசியமாகும்.
விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் பிரசாரங்களின் போது கூறியிருந்தார். அதன்படி விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்ைககள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயம் மீது இளவயதினருக்கு ஆர்வம் ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.