நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென அவசர மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
முதற்கட்டமாக போர்வைகள், குளோரின் மாத்திரைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட 4.2 தொன் அவசர மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா, இரண்டாம் கட்டமாக 21.5 தொன் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்துள்ளதாக காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியத் தூதரகம், ‘அடிப்படை சுகாதார வசதிப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நுளம்பு வலைகள், உயிர்காப்பு அங்கிகள், உறங்கும் விரிப்புகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 21.5 தொன் அவசர மனிதாபிமான உதவி பொருட்கள் தற்போது நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த உதவிப் பொருட்கள் வௌ்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாள்கஞ்சிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
எனினும் எதிர்வரும் நாட்களிலும் மேலும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. நேபாளத்துக்கு தேவையான ஆதரவையும் உதவியையும் இந்தியா தொடர்ந்து வழங்கும். இதன் நிமித்தம் நேபாள அரசாங்கத்துடன் இந்திய அரசு தொடர்ந்தும் தொடர்பில் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த அவசர நிவாரண உதவிப் பொருட்கள் தொகுதியை இந்திய அரசின் இரண்டாவது செயலாளர் நாராயண் சிங், பாங்கே மாவட்ட உதவி பிரதம மாவட்ட அதிகாரியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.