நாட்டில் கடந்த சில தினங்களாகச் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகர நிலையே இச்சீரற்ற காலநிலைக்கு காரணமாக அமைந்திருப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
அதேநேரம் மழையுடன் கூடிய இச்சீரற்ற காலநிலையினால் பல மாவட்டங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 13 மாவட்டங்களில் இக்காலநிலை பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேவைப்படும் பட்சத்தில் அவசர மீட்பு பணிகளில் ஈடுபடவென விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அதேநேரம், வெள்ள நீர் சூழ்ந்துள்ள சில பிரதேசங்களில் கடற்படையினர் அவசர நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
என்றாலும் மழைவீழ்ச்சி தொடராகக் கிடைக்கப்பெற்று வருவதன் விளைவாக களனி கங்கை, களுகங்கை, தெதுரு ஒயா, ஜின் கங்கை, அத்தனகலு ஒயா ஆகியவற்றின் நீர் மட்டங்கள் உயர்ந்த வண்ணமுள்ளன. அதனால் இந்த ஆறுகளுக்கு அருகில் காணப்படும் தாழ் நிலப் பிரதேசங்களிலும் ஏனைய சில பிரதேசங்களிலும் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அத்தனகலு ஓயா, ஊறுவல ஓயா, குக்குலே கங்கை போன்ற பிரதேசங்களில் காணப்படும் தாழ்நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் குக்குலே கங்கை நீர்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மேலதிக நீரை வெளியேற்றவென வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் தாழ் நிலப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலையினால் களுத்துறை மாவட்டத்திலுள்ள பண்டாரகம, அகலவத்தை, வலலாவிட்ட, புளத்சிங்க, மில்லயனிய, மதுராவல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அதன் விளைவாக அப்பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் நீரிழ் மூழ்கியுள்ள பிரதேசங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் அவ்வாறான பிரதேச மக்களுக்கு அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவை இவ்வாறிருக்க, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை, குருநாகல், நுவரெலிய, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால் மலைநாட்டிலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் வாழும் மக்கள் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்து விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்.
குறிப்பாக தற்போதைய சூழலில் வீடுகளின் சுவர்களிலும் நிலத்திலும் திடீரென வெடிப்புக்கள் ஏற்படல், அத்தகைய வெடிப்புகள் விரிவடைதல், ஏற்கனவே காணப்படும் நீரூற்றுக்கள் திடீரென காணாமல் போதல், புதிய நீரூற்றுகள் உருவாகுதல், அத்தகைய நீரூற்றுகளில் இருந்து சேற்று நீர் வெளிப்படல், உயர்ந்த மரங்களும் மின்சார மற்றும் தொலைபேசிக் கோபுரங்களும் திடீரென சரிதல் போன்றவாறான முன்னறிகுறிகள் தென்படுமாயின் தாமதியாது பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டும். அத்தோடு அத்தகைய அறிகுறிகள் குறித்து பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கவும் தவறக்கூடாது என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது.
தற்போதைய சீரற்ற காலநிலையினால் தாழ் நிலப் பிரதேசங்களி்ல் வெள்ள அச்சுறுத்தலும் மலைநாட்டிலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டிருக்கின்றன.
இக்காலநிலையினால் புத்தளம், கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், கண்டி, கிளிநொச்சி, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின் படி இச்சீரற்ற காலநிலையினால் நாட்டில் 33 ஆயிரத்து 379 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் இச்சீரற்ற காலநிலையினால் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான நலன்புரி நிலையங்களில் 1751 குடும்பங்களைச் சேர்நத 6 ஆயிரத்து 954 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 238 இருப்பிடங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் அவசர நிவாரணப் பணிகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா, ஐம்பது மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஆகவே தற்போதைய சூழலில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அது குடிமக்களின் பொறுப்பாகும்.