Home » மாணவர்களைச் சீரழிக்கும் கைத்தொலைபேசி பாவனை!

மாணவர்களைச் சீரழிக்கும் கைத்தொலைபேசி பாவனை!

by sachintha
October 12, 2024 6:00 am 0 comment

கைத்தொலைபேசிப் பாவனை காரணமாக எமது நாட்டில் இளவயதினருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக நிபுணர்களின் ஆய்வுகள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் கைத்தொலைபேசிப் பாவனையானது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவல் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. பெரியவர்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படுவதைப் பார்க்கிலும், இளவயதினர் மத்தியில் பாதிப்பு ஏற்படுவதென்பது பாரதூரமானதாகும். இளவயதினரின் பாதிப்பானது நாட்டின் எதிர்காலத்தையே சீரழித்து விடுவதாகும். எனவே கைத்தொலைபேசிப் பாவனையில் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஆராய்ந்து அதுகுறித்த பயனுள்ள தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இன்றைய உலகில் சிறுவர் பருவத்தைத் தாண்டியவர்களை எடுத்துக் கொள்வோமானால், கைத்தொலைபேசி இல்லாதவர்களைக் காண்பது அரிது. அதுவும் ஸ்மார்ட் தொலைபேசி எனப்படுகின்ற திறன்பேசியை வைத்திருக்காதவர்களைக் காண்பது முடியாத காரியமாகும். மாணவர்களில் பலர் க.பொ.த சாதாரணதர வகுப்புக்கு வருவதற்கு முன்னரே திறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர்.

தமது பிள்ளைகளின் நச்சரிப்புத் தாங்காமல் கைத்தொலைபேசியொன்றை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் அதிகமானோரை நாம் இன்று காண்கின்றோம். அதன் பிறகு அந்தக் கைத்தொலைபேசியானது அந்த மாணவனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது. அம்மாணவனின் கல்வி பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, ஏனைய பலவழிகளில் இருந்து வருகின்ற பாதிப்புகள்தான் அநேகம்.

அறிவியல்துறையைப் பொறுத்தவரையில் திறன்பேசிகள் பலவிதமான நன்மைகளைத் தருகின்றன. ஆனால் இன்றைய நிலையில் பார்க்கின்ற போது, தீங்குகள்தான் அதிகம் என்பது புரிகின்றது. நம் அன்றாட அனுபவங்களே இவற்றை உறுதிப்படுத்துகின்றன. ஸ்மார்ட் தொலைபேசியின் வரவுக்குப் பிறகு மக்களின் ஏராளமான நேரம் விரயமாக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை தொலைபேசியில் உரையாடியும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் வீணாக்குகிறார்கள்.

கைத்தொலைபேசியை தமது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதென்பது இன்று பெற்றோரின் கடமையாகி விட்டது. கைத்தொலைபேசியொன்றை வாங்கிக் கொடுக்காவிடின், தமது பிள்ளையின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியேற்படுமென்று பெற்றோர் பலர் நினைக்கின்றனர். எனவே பெற்றோர் வேறு வழியின்றி தமது பிள்ளைகளுக்கு கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுக்கின்றனர்.

அவ்வாறு பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்ற ஸ்மார்ட் தொலைபேசியே மாணவர்கள் பலரின் எதிர்காலத்தைப் பாழாக்கி விடுகின்றது. கைத்தொலைபேசிக்கு அடிமையாகிப் போனதால் கல்வியைப் பாழாக்கி, ஒழுக்கமும் பாழாகிப் போன மாணவர்கள் பலர் உள்ளனர்.

அவசியமான பணிகளுக்கு கைத்தொலைபேசி பயன்படுத்தப்படுவதை விட, பொழுதுபோக்குக்ேக இன்று அதிக நேரம் தொலைபேசியில் செலவாகின்றது. தொலைபேசியில் அதிகம் பேசப்பேச பணம் கரைகிறது. பல நாடுகளில் மாணவர்கள் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மாணவர்கள் தங்களின் நேரத்தையும், கவனத்தையும் தொலைபேசி மூலம் இழந்து வருகின்றனர். அது மட்டுமன்றி, தொலைபேசிப் பயன்பாடு மூளையின் நரம்புகளைப் பாதித்து, கவனம் செலுத்தும் ஆற்றலைக் குறைக்கிறது, நினைவாற்றலைப் பாதிக்கிறது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இளவயது மாணவர்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

மது, போதைப்பொருள் போலவே தொலைபேசிப் பயன்பாடும் ஓர் அடிமைப் பழக்கமாக மாறிவருகிறது. இளைஞர்கள் தொலைபேசிக்கு அடிமையாகி விட்டனர் என்றும், அதனைப் பயன்படுத்தாமல் இருந்தால் பித்துப் பிடித்தவர் போலாகி விடுகின்றனர் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொது இடங்களில்கூட அருகே இருக்கும் சகமனிதர்களைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தொலைபேசியில் நேரத்தைச் செலவிடுகின்றனர். வழிபாட்டுத் தலங்கள், கருத்தரங்குகள் போன்ற இடங்களிலும்கூட தொலைபேசியை அணைத்து விடுங்கள் என்று அறிவிப்புச் செய்யும் அவலநிலை காணப்படுகின்றது.

தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டே வாகனம் செலுத்துவதனால் விபத்துகள் நிகழ்கின்றன. ஆனாலும் இந்தப் பழக்கம் குறைந்தபாடாக இல்லை என்பதை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.

உயிர்காக்க, அவசரத் தேவைகளுக்கு, பயண நேரத்திற்கென கைத்தொலைபேசியின் நல்ல பயன்பாடுகள் பல இருந்தாலும்கூட, அதே தொலைபேசி பல தீய செயற்பாடுகளுக்கும் பயன்படுகிறது என்பது அச்சத்தைத் தருகிறது. பலவிதமான சமூகத் தீமைகளுக்கும் தொலைபேசியைப் பயன்படுத்தும் சமூகவிரோதக் கும்பல்களும் உள்ளன. தொழில்நுட்பம் என்பது இருபுறமும் கூர்மையான கத்தி என்பதை நாம் மறந்து விடலாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT