ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு (09) நடைபெற்றது.
பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததும் பாரம்பரியமாக நடைபெறும் கௌரவமளிப்பு நிகழ்வாக இம்முறையும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் பிரதானிகள், பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த கௌரவமளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது பதவிக்காலத்தில் பணிகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குழாம் உள்ளிட்ட பணியாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
பாராளுமன்ற பணியாளர்களுடன் சிநேகபூர்வமான முறையில் கலந்துரையாடிய சபாநாயகர், பாராளுமன்ற பணியாளர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நிகழ்வில் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் துணைவியார் நெலும் வளவகேயும் இணைந்துகொண்டதுடன், தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமையை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் அறிவித்திருந்தனர்.