கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்பு திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியை மையமாக கொண்ட இடங்களை டெங்கு அற்ற சூழலாக மாற்றுவதற்கான சிரமதான வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பல திணைக்களங்கள் இணைந்து கிளிநொச்சி நகரின் முக்கியமான நான்கு இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணியை ஆரம்பித்தது.
கரடிப்போக்கு சந்தியிலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகம்வரையும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்திலிருந்து டிப்போ சந்திவரையும் டிப்போ சந்தியிலிருந்து கனகபுரம் சந்திவரையும் டிப்போ சந்தியிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைவரையான இடங்களில் நேற்றையதினம் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை பிரதேச செயலகங்கள், கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், கரைச்சி பிரதேச செயலகம், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பாதுகாப்பு துறை, கரைச்சி பிரதேச சபை, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புகள், சமூக தொண்டர் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த உத்தியோகத்தர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களிலுள்ள குப்பைகள், பொலித்தீன் பைகள், வெற்றுப் போத்தல்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
பரந்தன் குறூப் நிருபர்