லண்டனின் இலக்கிய மேடைகளில் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் ஆற்றொழுக்கான நடையோடும் பேசவல்லவராக வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் அவரது ஆழ்ந்த வாசிப்பையும் பரந்த தேடலையும் கொண்ட நூலாகும்.
அண்மையில் அவரது 85ஆவது பிறந்தநாள் ஆவணத் தொகுப்பை பார்வையிட்டபோது நான் வியந்தேன். தமிழர் மத்தியில் வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டியவர்களில் சிறீக்கந்தராசா மிக முக்கியமானவர் என்பதனை என்னால் உணர முடிந்ததது. இவ்வேளை எனது தந்தை அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்தவேளை இற்றைக்கு இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் அவர் குறித்த ஆவணப் பதிவொன்றை விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கலைச்செல்வனுடன் இணைந்து ஆவணப்படுத்தியிருந்தார்.
நூலகங்களில் பார்த்த ஓலைச்சுவட்டை இந்தப் பெரியவர் வீட்டில் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்பது புதுமையானது. 250 வருடங்களுக்கு முன்னரான இத்தகைய ஏட்டோலையை தனது ஒன்பது வயதிலேயே வாசிப்பதில் திறமை கொண்டிருந்தவர் அவர்.
பருத்தித்துறை புலோலி கிழக்கில் வழக்கறிஞர் மாணிக்கம் செல்லத்தம்பிக்கும் காந்திமதி செல்லத்தம்பிக்கும் மகனாகப் பிறந்தவர் வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. ஆரம்பத்தில் புலோலி தெற்கிலுள்ள வேலாயுதம் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டிருந்தார். அப்பள்ளியில் இவர் காத்திகேசு வாத்தியார், முத்துக்குமார் வாத்தியார், வைரமுத்து வாத்தியார் போன்ற தலைசிறந்த தமிழ் ஆசிரியர்களிடம் பயின்று மிகச்சிறந்த மாணவனாகத் திகழ்ந்திருக்கிறார்.
பின்னர் இந்தியாவில் சென். ஜோசஃப் கல்லூரியில் கல்வியை மேற்கொண்டபோது அருட்திரு. சிக்குவாரா என்ற மிகச் சிறந்த ஆங்கில விரிவுரையாளரின் கீழ் தனது ஆங்கிலத்தை மேன்மைப்படுத்தியதாகக் கூறுகின்றார் வழக்கறிஞர் சிறீக்கந்தராசா. பின்னர் விஞ்ஞானப் பட்டதாரியாகப் பட்டம் பெற்று இலங்கைக்குத் திரும்பினார்.
லண்டனிலே சட்டத்துறையில் பட்டம் பெற்று சட்டத்தரணியாகப் பணிபுரிந்தார். சட்டத்தரணியாக மட்டுமன்றி சிறந்ததொரு பேச்சாளர், சிறந்ததொரு எழுத்தாளர், சிறந்ததொரு மொழிபெயர்ப்பாளர். இத்தகைய பெரும் அறிஞரின் ஆவணப்படத்தை அவருடன் நெருக்கமான இலக்கிய உறவைக் பேணிவரும் மு.நித்தியானந்தன் மிக முக்கியமான தகவல்களோடு அதனை மிக அற்புதமாக நெறிப்படுத்தியிருப்பது தமிழ் மக்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
இலங்கை அரசியல் யாப்பை, இலங்கைக் குடியரசின் சட்ட அமைப்பை, ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் புதிய அரசியல் அமைப்பை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சட்டம் மாத்திரமன்றி தமிழ் இலக்கியம், அறிவியல், ஆங்கில மொழிபெயயர்ப்பு என்று இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள பெரிய அறிஞர் அவர். தமிழ் மக்கள் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விடயம் அது.
அவரின் ஆளுமை நிறைந்த தோற்றம் நெருங்குவதற்குச் சற்று அறிவுப்பயத்தை ஏற்படுத்தினாலும் பழகுவதற்கு மிக எளிமையானவர் என அறியமுடிந்தது. இத்தகைய ஆளுமைமிக்க அறிஞரை தமிழ் மக்கள் அனைவர் சார்பிலும் பாராட்டிப் பெருமை கொள்கின்றேன். இன்னும் பல்லாண்டு நிறைந்த சுகத்தோடு அவர் சேவை விசாலிக்க வேண்டி இதயம் வாழ்த்துகிறது.
இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த சிறீதரன் தேர்ந்த ஒளிபரப்பாளராகத் தீபம் தொலைக்காட்சியில் திகழ்ந்தவர். ‘நித்தி என்ற பேராசான்’ என்ற ஆவணப்படத்தைத் விமர்சகர் மு. நித்தியானந்தனின் பவளவிழாவின் போது தயாரித்து பாராட்டுப்பெற்றவர். அதே சிறீதரன் வழக்கறிஞர்,- தமிழறிஞர் சிறீக்கந்தராசாவின் இந்த ஆவணப்படத்தையும் அற்புதமாக தனது கைவண்ணத்தால் அமைத்துத் தந்தமைக்கு தமிழ் உலகம் அனைவருமே இவரைப் பாராட்ட வேண்டும்.
நவஜோதி ஜோகரட்னம்
லண்டன்